முதியவரிடம் வழிப்பறி செய்துவிட்டு தப்பியோட முயன்ற கொள்ளையன் ரெயில் மோதி பலி

தாக்குதலில் காயமடைந்த முஸ்தபா கூச்சலிட்டுள்ளார்
திருவனந்தபுரம்
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் பிரங்கடி பகுதியை சேர்ந்த முதியவர் முஸ்தபா (வயது 60). இவர் நேற்று மாலை 6 மணியளவில் நியூ மேஹா பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 கொள்ளையர்கள், முஸ்தபாவை தாக்கிவிட்டு அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ.1,500 பணத்தை பறித்து சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த முஸ்தபா கூச்சலிட்டுள்ளார். அவரின் கூச்சல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து சென்றுள்ளனர்
ஆனால், இரு கொள்ளையர்களும் அங்கிருந்து தண்டவாளத்தில் ஓடி தப்பிச்சென்றுள்ளனர். அப்போது, தண்டவாளத்தில் ஓடிக்கொண்டிருந்த கொள்ளையன் மீது ரெயில் மோதியது. இதில் அந்த கொள்ளையன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தான். மற்றொரு கொள்ளையன் பஷீர் என்பவரை உள்ளூர் மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அதேவேளை, ரெயில் மோதி உயிரிழந்த கொள்ளையனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






