நீட் முறைகேடு: மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் தள்ளிப்போகிறது
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கு முன்னதாக தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பீகார் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கடந்த மாதம் நீட் தேர்வு முடிவு வெளியானது. அப்போது பலர் தேர்வில் பெற முடியாத மதிப்பெண்களை எல்லாம் பெற்றது தெரியவந்தது. அப்போது கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது தெரிய வந்தது.
இதனால் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். மேலும் போராட்டங்கள் நடத்தினர். பலர் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடைபெற உத்தரவிட வேண்டும் எனவும் ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனு தாக்கல் செய்துள்ளனர். சுமார் 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இளநிலை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கவுன்சிலிங் மற்றும் அதற்கான அட்டவணை குறித்த தகவல் ஏதும் இன்று வெளியாகவில்லை. கவுன்சிலிங்கில் சில புதிய மருத்துவ கல்லூரிகள் சேர்ப்பதற்கான வேலை இன்னும் நிறைவடையாத நிலையில் கவுன்சிலிங் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய மருத்துவ கல்லூரி சேர்த்த பின்னர் இளநிலை மருத்துவ கவுன்சிலிங் குறித்த தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இம்மாத இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.