பணியிடங்களில் பாதுகாப்பு கோரி 100-க்கும் மேற்பட்ட வங்காள திரையுலக பெண் கலைஞர்கள் கடிதம்


பணியிடங்களில் பாதுகாப்பு கோரி 100-க்கும் மேற்பட்ட வங்காள திரையுலக பெண் கலைஞர்கள் கடிதம்
x
தினத்தந்தி 27 Aug 2024 6:20 PM IST (Updated: 27 Aug 2024 6:23 PM IST)
t-max-icont-min-icon

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி 100-க்கும் மேற்பட்ட வங்காள திரையுலக பெண் கலைஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவமனையில் கடந்த 9-ந்தேதி பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே இந்த வழக்கின் விசாரணை கொல்கத்தா காவல்துறையிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதே சமயம், பெண் டாக்டரின் கொலைக்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி திரைப் பணியாளர்களுக்கான மகளிர் மன்றத்தின் சார்பில் மேற்கு வங்காள அரசின் டெலி அகாடமிக்கு 100-க்கும் மேற்பட்ட வங்காள திரையுலக பெண் கலைஞர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;-

"கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பெண் மருத்துவர் ஒருவர் தனது பணியிடத்தில் சித்ரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த கொடூரமான குற்றத்தைக் கண்டித்து, திரைத்துறையினர், நாடகக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், இசைக்கலைஞர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் வீதிகளில் இறங்க போராடி வருவது ஆறுதல் அளிக்கிறது.

இருப்பினும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் தொடர்ச்சியான பாலியல் அத்துமீறல்/துன்புறுத்தல்/வன்முறை சம்பவங்களுக்கு எதிராக நம்மில் சிலர் இன்னும் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.

வங்காள திரைப்படங்கள், ஊடகம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் பணிபுரியும் பெண்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான பாலியல் அத்துமீறல்களை எதிர்கொள்கின்றனர். இது ஒரு வெளிப்படையான ரகசியமாகவும், மூடிமறைக்கப்பட்ட உண்மையாகவும் இருக்கிறது. இது தொடர்பான வெளிப்படையான உரையாடல் எதுவும் நடக்கவில்லை.

இந்த நிலையில், பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டங்களுக்கு உட்பட்டு தொலைக்காட்சி, ஊடகம் மற்றும் திரைத்துறையில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏதேனும் சட்டரீதியான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி விசாரிக்கக் கோரி இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

பணியிடங்களில் பெண் தொழிலாளர்களின் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது அனைத்துத் துறைகளிலும் உள்ள முதலாளிகளின் பொறுப்பு என்பதை நாங்கள் அறிவோம். இதற்கு தொலைக்காட்சி, ஊடகம் மற்றும் திரைத்துறையும் விதிவிலக்கல்ல என்பதை நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம்."

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story