வங்கிக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்து ரூ.25 லட்சம் கொள்ளை.. அதிர்ச்சி சம்பவம்
வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்து ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள்.
பாட்னா,
பீகாரில் பட்டப்பகலில் வங்கிக்குள் ஆயுதங்களுடன் புகுந்து ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டம் பார்பிகா போலீஸ் நிலைய சரகத்துக்கு உட்பட்ட பார்பிகா-ஹதியா சவுக் பகுதியில் ஆக்சிஸ் வங்கி கிளை செயல்படுகிறது. நேற்று காலை வழக்கம்போல் வங்கி திறக்கப்பட்டு, செயல்பட்டுக்கொண்டு இருந்தது. நேற்று மாதத்தின் முதல் தேதி என்பதால், வங்கியில் ஏராளமானோர் பணம் செலுத்துவதற்கும், எடுப்பதற்கும் வந்திருந்தனர். அப்போது மர்ம கும்பல் ஒன்று வங்கிக்குள் திபு திபுவென புகுந்தது. அந்த கும்பலின் கைகளில் துப்பாக்கிகள் இருந்தன.
இதைப்பார்த்து வங்கியில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல், வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் நகை மற்றும் பணம் இருக்கும் பெட்டக அறைக்குள் சில முக்கிய வங்கி அதிகாரிகளை துப்பாக்கி முனையில் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அழைத்து சென்றனர். தொடர்ந்து பெட்டக அறையில் இருந்த ரூ.25 லட்சத்தை துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர்.
இதுதொடர்பான புகாரின்பேரில் பார்பிகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை தேடிவருகிறார்கள். பட்டப்பகலில் துப்பாக்கிகளுடன் புகுந்து வங்கியில் கொள்ளையடித்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.