செந்தில் பாலாஜி வழக்கு: இன்று மீண்டும் விசாரணை
செந்தில் பாலாஜியின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.
புதுடெல்லி,
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14-ந்தேதி கைது செய்தது.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் வக்கீல் ராம் சங்கர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அபய் எஸ் ஒகா, ஏ.ஜி. மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த சூழலில் நேற்று நடந்த விசாரணையின்போது, 'ரூ.67.74 கோடிக்கான பண மோசடிக்கான புகாருக்கான ஆதாரமாக கூறப்படும் ஆவணம் கைப்பற்றப்பட்ட பென் டிரைவில் இல்லை என்பது செந்தில் பாலாஜியின் வாதமாக உள்ளது. இந்த ஆவணம் எப்படி அமலாக்கத்துறைக்கு கிடைத்தது?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் சோயிப் ஹுசைன் பதிலளிக்கையில், அந்த ஆவணத்தை அமலாக்கத்துறை கைப்பற்றவில்லை. மத்திய குற்றப்பிரிவு கைப்பற்றி உள்ளது. பண மோசடிக்கான புகாருக்கான ஆதாரமாக கூறப்படும் ஆவணம் கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் இருந்தது.
பண மோசடிக்கான புகாருக்கான ஆதாரமாக கூறப்படும் ஆவணத்தை போக்குவரத்துத்துறையில் கண்டக்டர், என்ஜினீயர் உள்ளிட்ட வேலைகளை ரூ.1.5 லட்சம் தொடங்கி ரூ.8 லட்சம் வரை லஞ்சம் பெற்று விற்றதும், இதனால் செந்தில் பாலாஜிக்கு மொத்தம் ரூ.67.2 கோடி கிடைத்துள்ளது என்று மத்திய குற்றப்பிரிவு கைப்பற்றிய பென் டிரைவில் தெளிவாக உள்ளது.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக லஞ்சம் பெற்ற காலக்கட்டத்தில் செந்தில் பாலாஜியின் வருமானம் அதிகரித்துள்ளது. 2016-2017 காலக்கட்டத்தில் வங்கியில் லட்சக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட ரொக்கத்திற்கு பான் எண்ணும், முகவரியும் இல்லை' என்று அவர் வாதிட்டார்.
வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அமலாக்கத் துறையி்ன் வாதங்களை தொடரும் விசாரணையை இன்று பிற்பகல் 3 மணிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.