இது உங்கள் சொத்து... அரசு பஸ்சை மாமியார் வீட்டுக்கு ஓட்டி சென்ற நபர்; அடுத்து நடந்த டுவிஸ்ட்


இது உங்கள் சொத்து... அரசு பஸ்சை மாமியார் வீட்டுக்கு ஓட்டி சென்ற நபர்; அடுத்து நடந்த டுவிஸ்ட்
x
தினத்தந்தி 28 July 2024 5:57 AM IST (Updated: 28 July 2024 6:19 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர பிரதேசத்தில், சந்தேகத்திற்குரிய வகையில், ஆட்கள் யாருமில்லாமல் தனியாக சென்ற அரசு பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

கர்னூல்,

ஆந்திர பிரதேசத்தில் ஆத்மகுரு மண்டலத்திற்கு உட்பட்ட வேங்கடாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் தரகையா. வாகன ஓட்டுநராக இருந்து வருகிறார்.

இவர், நந்தியால் மாவட்டத்தில் முச்சுமர்ரி பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் தரகையாவின் மனைவி, சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார். அவரை காண செல்லலாம் என தரகையா முடிவு செய்துள்ளார்.

ஆனால் அவரிடம், போதிய பணவசதி இல்லை. அப்போது அதிர்ஷ்டம் வேறு வடிவில் வந்துள்ளது. ஆத்மகுரு பஸ் நிலையத்தில் யாரும் கேட்பாரின்றி அரசு பஸ் ஒன்று தனியாக நின்றிருக்கிறது. அதன் சாவிகளும் பஸ்சிலேயே இருந்துள்ளன.

இதனால், ஓட்டுநரான தரகையாவுக்கு உடனடியாக யோசனை ஒன்று வந்துள்ளது. ஊரிலுள்ள மனைவியை காண அந்த பஸ்சை ஓட்டி செல்வது என முடிவு செய்திருக்கிறார். அரசு பஸ்சில் ஏறி அதனை இயக்கி, மாமியார் வீட்டுக்கு சென்றார்.

ஆனால், சந்தேகத்திற்குரிய வகையில், ஆட்கள் யாருமில்லாமல் தனியாக சென்ற அரசு பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். விசாரணையில், அரசு பஸ்சை அங்கீகாரமின்றி பயன்படுத்தியதற்காக, தரகையாவை போலீசார் கைது செய்தனர்.

எனினும், அவருக்கு மனநல பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அவருடைய குடும்பத்தினரும், உறவினர்களும் கூறுகின்றனர். டெப்போவில் இருந்து அரசு பஸ் காணாமல் போயுள்ளது என அதிகாரிகளிடம் அதன் ஓட்டுநர் புகாராக தெரிவித்து இருக்கிறார்.

இதன் அடிப்படையிலும், சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணை நடத்தினர். தரகையாவிடம் இருந்த அரசு பஸ்சை போலீசார் பறிமுதல் செய்தனர். அரசு பஸ் பின்னர், ஆத்மகுரு டெப்போ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. தரகையா மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதற்காக அவருக்கு எதிராக போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.


Next Story