தமிழக காங்கிரசுக்கு பெண் தலைவர் - டெல்லி தலைமை ஆலோசனை

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் பெரும்பாலானோர் த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க விரும்பியுள்ளனர்.
தமிழக காங்கிரசுக்கு பெண் தலைவர் - டெல்லி தலைமை ஆலோசனை
Published on

புதுடெல்லி,

தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை சட்டசபை தேர்தலுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில், தேர்தலுக்கு பிறகு பதவி விலகப்போவதாக தெரிவித்தார். அதில் இருந்து தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவர் யார்? என்ற பேச்சு எழுந்துள்ளது. இதற்கிடையே, பதவி விலகப்போவதாக செல்வப்பெருந்ததை அறிவித்ததற்கு, கட்சியில் அவருக்கு எதிரான அழுத்தங்களே காரணம் என கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலில் கட்சியில் பெரும்பாலானோர் த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க விரும்பியுள்ளனர். ராகுல்காந்தி கூட அதையே விரும்பியுள்ளார். ஆனால் செல்வப்பெருந்தகை கட்சியின் தேசியத் தலைவர் ஆதரவோடு அதனை முறியடித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் தொடர்பான அழுத்தத்தால்தான் பதவி விலகப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், தேர்தலுக்கு பிறகு பெரும்பாலான கருத்துக் கணிப்பு முடிவுகள் தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ளன. இந்த கருத்துக்கணிப்புகள் அப்படியே நடந்தால் தேசிய தலைமையில் தனக்கு எதிரான நிலைப்பாடு இருக்காது என செல்வப்பெருந்தகை தற்போது கருதி வருகிறார். இதனால் பதவி விலகல் பற்றிய பேச்சு தற்போது அவரிடம் இல்லை.

இருப்பினும், கட்சியில் அவருக்கு இருக்கும் எதிர்ப்புகள் காரணமாக மாநில தலைமைக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய தலைவர் பதவிக்கு பல நிர்வாகிகள் முயற்சி செய்கிறார்கள். பல முன்னாள் தலைவர்களும் இதில் உள்ளனர். ஆனால் தேசிய தலைமை வேறு விதமாக ஆலோசிப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

பா.ஜனதாவின் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கடுமையாக எதிர்த்த மாநிலம் தமிழ்நாடு. எனவே, அந்த தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை வழிநடத்த இம்முறை ஒரு பெண்ணுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என கட்சி மேலிடம் கருதுவதாக மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக காங்கிரசைப் பொறுத்தவரை இதற்கு முன்பு பெண் தலைவராக 1982-ம் ஆண்டு மரகதம் சந்திரசேகர் இருந்தார். அதற்கு பின்பு இதுவரை பெண் தலைவர் நியமிக்கப்படவில்லை. தற்போதைய சூழலில் ஒரு பெண்ணுக்கு அதிகாரம் அளித்தால் அது. பா.ஜனதாவுக்கு எதிரான மக்கள் அணுகுமுறையாக இருக்கும் என காங்கிரஸ் நினைக்கிறது. எனவே, அது தொடர்பான ஆலோசனையில் தலைமை நிர்வாகிகள் இறங்கி உள்ளனர்.

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் நாளை (திங்கட்கிழமை) வெளியாகிறது. இதனைத்தொடர்ந்து உடனடியாக புதிய தலைவர் அறிவிப்பு இருக்குமா? என்றால் இருக்காது என கூறுகிறார்கள். எப்படியும் 10-ந்தேதிக்கு மேல் ஆகும் என சொல்லப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com