ஆயிரங்காளியம்மன் கோவில் திருவிழா


ஆயிரங்காளியம்மன் கோவில் திருவிழா
x

திரு-பட்டினத்தில் 5 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆயிரங்காளியம்மன் கோவில் திருவிழா திங்கட்கிழமை தொடங்குகிறது.

காரைக்கால்

திரு-பட்டினத்தில் 5 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆயிரங்காளியம்மன் கோவில் திருவிழா திங்கட்கிழமை தொடங்குகிறது.

ஆயிரங்காளியம்மன் கோவில்

காரைக்காலை அடுத்த திரு-பட்டினத்தில் 108 கோவில்களில், 108 குளங்கள் உள்ளன. அவற்றில் நடுநாயகமாக விளங்கி வருவது ஆயிரங்காளியம்மன் கோவில் ஆகும். அம்மனுக்கு படைக்கப்படும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஆயிரம், ஆயிரமாக படைக்கப்படுவதால் ஆயிரங்காளியம்மன் என்று அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுகிறது.

அதாவது, சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர், மீண்டும் பேழையில் வைத்து மூடிவிடுவது வழக்கம். அடுத்த 5 ஆண்டுக்கு பின்னரே பேழை திறக்கப்படும். அதுவரை பேழை மட்டுமே வழிபடப்படும். கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் ஆயிரங்காளியம்மன் கோவில் விழா சிறப்பாக நடைபெற்றது.

6-ந் தேதி தொடங்குகிறது

அதன்படி, 5 ஆண்டுகள் கழித்து திங்கட்கிழமை பேழையில் (பெட்டி) இருந்து அம்பாளை எழுந்தருளச்செய்யும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. அன்றைய தினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோழீஸ்வரர் கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க பூஜைப்பொருட்கள், பழங்கள் உள்பட சீர்வரிசை பொருட்கள் ஒவ்வொன்றும் 1,000 வீதம் ஆயிரங்காளியம்மன் கோவிலுக்கு வேன்களில் எடுத்து வரப்படும். 8-ந் தேதி பெரும் தளியல், மகா தீபாராதனை நடைபெறும்.

8 மற்றும் 9-ந்தேதிகளில் மட்டுமே அம்மனை தரிசிக்க முடியும். 9-ந்தேதி நள்ளிரவில் அம்மனை பேழையில் மீண்டும் ஸ்தாபிதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஏற்பாடுகள் தீவிரம்

விழாவில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அப்போது பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் வரும் வழியில் நிழல் பந்தல் அமைப்பது, எளிய முறையில் அம்மனை தரிசனம் செய்வது, பக்தர்கள் வழங்கும் பழங்கள், பலகார வகைகள் மற்றும் பொருட்களை வரிசைப்படுத்துவதற்கான இடங்களை தயார் செய்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


Next Story