ஓய்வு பெற்ற பிரெஞ்சு ராணுவ வீரரிடம் ரூ.12 லட்சம் மோசடி


ஓய்வு பெற்ற பிரெஞ்சு ராணுவ வீரரிடம் ரூ.12 லட்சம் மோசடி
x

திருமண ஆசை காட்டி ஓய்வு பெற்ற பிரெஞ்சு ராணுவ வீரரிடம், பெண்போல வாட்ஸ் அப்பில் பழகி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக வீட்டில் குடியிருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி

திருமண ஆசை காட்டி ஓய்வு பெற்ற பிரெஞ்சு ராணுவ வீரரிடம், பெண்போல வாட்ஸ் அப்பில் பழகி ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக வீட்டில் குடியிருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பிரெஞ்சு ராணுவ வீரர்

புதுவை மோந்திரேஸ் வீதியை சேர்ந்தவர் வேணுசெட்டியார் பிரான்சிஸ் (வயது 75). பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவர் பிரெஞ்சு ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டின் மாடியில் தனியார் தொலைக்காட்சியில் வேலைபார்ப்பதாக கூறி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரவிசங்கர் (29) என்பவர் வாடகைக்கு குடிவந்துள்ளார். அவர் வேணுசெட்டியார் பிரான்சிஸ்டம் நல்ல முறையில் பழகியதால் அவரது பேச்சை உண்மை என்று நம்பியுள்ளார்.

இந்த நிலையில் ரவிசங்கர் அவரிடம் ஒரு பெண்ணின் படத்தை காட்டி அவரது பெயர் சுருதி என்கிற லாவண்யா என்றும், அவரது செல்போன் என்று கூறி ஒரு எண்ணையும் கொடுத்துள்ளார். சில நாட்கள் கழித்து அந்த எண்ணிலிருந்து வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்திகள் வந்தன. அதற்கு வேணுசெட்டியார் பிரான்சிஸ் பதில் அளித்தார். இதனால் பழக்கம் நீடித்தது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் அந்த பெண் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதை உண்மை என்று வேணுசெட்டியார் பிரான்சிஸ் நம்பினார்.

ரூ.12 லட்சம் மோசடி

இந்த நிலையில் அந்த பெண், வேணுசெட்டியார் பிரான்ஸிடம் தனக்கு பணம் தேவைப்படுகிறது என கூறியுள்ளார்.இதனை நம்பிய அவரும் பல்வேறு தவணைகளாக நகை, பணம் என ரூ.12 லட்சம் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் ரவிசங்கர் யாரிடமும் சொல்லாமல் திடீரென வீட்டை காலி செய்துவிட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர் அந்த பெண்ணும் வேணுசெட்டியார் பிரான்சிஸிடம் பேசவில்லை.

இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து ரவி சங்கரை வலைவீசி தேடி வந்தார்.

கைது

இந்த நிலையில் ரவி சங்கர் கருவடிக்குப்பம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று ரவி சங்கரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது ரவி சங்கர் 3 செல்போன்களை பயன்படுத்தி அதன் மூலம் அவரே வேணுசெட்டியார் பிரான்சிஸ் செல்போனுக்கு, பெண் அனுப்புவதுபோல குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்


Next Story