குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 2 ஆண்டு சிறை


குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 2 ஆண்டு சிறை
x

புதுவையில் கடைகள், நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி

புதுவையில் கடைகள், நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தினால் 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை ஆணையரும், தொழிலாளர் துறை செயலாளருமான சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2 ஆண்டு சிறை, அபராதம்

புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை, குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்கு) சட்டம் 1986-ன் கீழ் தக்க நடவடிக்கைகளை எடுத்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பதில் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதையொட்டி உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு வாரம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி வரை தொழிலாளர் அதிகாரி (நலத்திட்டங்கள்) அலுவலகத்தில் உள்ள தொழிற்சாலை ஆய்வாளர்கள் மற்றும் உதவி தொழிலாளர் ஆய்வாளர்களை கொண்டு சிறப்பு ஆய்வு நடத்தப்படும்.

கடைகள், நிறுவனங்களில் குழந்தை மற்றும் வளர் இளம் பருவ தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்கு) சட்டம் 1986 பிரிவு -3 ன் கீழ் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பணியமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும் பிரிவு 3 ஏ.வின் படி 14 வயதிற்கு மேல் 18 வயதிற்குள் உள்ள இளம் பருவத்தினரை சுரங்கங்கள், தீப்பிடிக்கக்கூடிய அல்லது வெடிக்கக்கூடிய மற்றும் ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவதும் குற்றமாகும். மீறினால் பிரிவு 14 (1) மற்றும் 14 (1 ஏ) வின் படி கடும் நடவடிக்கை எடுத்து 2 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும்.

புகார் செய்யலாம்

பிரிவு 12-ன் படி அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் 3 ஏ மற்றும் 14-ன் சாராம்சத்தின் அறிவிப்பினை பணியிடத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வைக்க வேண்டும். இல்லை என்றால் ஒரு மாதம் வரை சிறை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.

குழந்தைகளுக்கு கல்வி அறிவை புகட்டுதல் மூலம் குழந்தை தொழிலாளர் முறையை அடியோடு ஒழிக்க முடியும். பொதுமக்கள் குழந்தைகள் மற்றும் வளர் இளம்பருவ தொழிலாளர்கள் குறித்து புகார் செய்ய புதுவை காந்திநகர், வழுதாவூர் சாலையில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகம் 2-ம் தளத்தில் உள்ள தொழிலாளர் அதிகாரி அலுவலகத்தில் புகார் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story