கந்து வட்டிக்கு கடன் வாங்கி சூதாடிய அரசு ஊழியர் தற்கொலை


கந்து வட்டிக்கு கடன் வாங்கி சூதாடிய அரசு ஊழியர் தற்கொலை
x

கந்து வட்டிக்கு கடன் வாங்கி சூதாட்டத்தில் பணத்தை இழந்த அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

வில்லியனூர்

கந்து வட்டிக்கு கடன் வாங்கி சூதாட்டத்தில் பணத்தை இழந்த அரசு ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

கந்து வட்டிக்கு கடன்

வில்லியனூர் அடுத்த கீழுர் சிவராந்தகம்பேட் அங்கன்வாடி வீதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 46). நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் ஜெயச்சந்திரன் நெட்டப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் கந்து வட்டிக்கு ரூ.4 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை 3 நம்பர் லாட்டரி சீட்டு போன்ற சூதாட்டத்தில் செலவிட்டு இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை.

தூக்கில் தொங்கினார்

கடனை திருப்பிக் கேட்டபோது ஜெயச்சந்திரனுக்கும், இன்ஸ்பெக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கலைவாணியிடம் சென்று பணத்தை தருமாறு இன்ஸ்பெக்டர் முறையிட்டுள்ளார். இதுகுறித்து கலைவாணி கேட்ட போது கணவவன்-மனைவி இடையே பிரச்சினை உருவானது.

இதனால் மனமுடைந்த ஜெயச்சந்திரன் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

நேற்று கீழுர் அருகே உள்ள சிவராந்தகம் ஏரிக்கரையில் உள்ள மரத்தில் ஜெயச்சந்திரன் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சூதாட்டத்தில் இழப்பு

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், கந்து வட்டிக்கு வாங்கிய பணத்தை சூதாட்டத்தில் இழந்ததால் மனமுடைந்து ெஜயச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story