புதுவை அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் நிதி


புதுவை அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் நிதி
x

புதுவை அரசுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் கோரிக்கை விடுத்தார்.

புதுடெல்லி

புதுவை அரசுக்கு கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரில் கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

புதுவை மாநிலத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. புதிய ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெற்றபோதிலும் டெல்லி சென்று பிரதமரை முதல்-அமைச்சர் ரங்கசாமி சந்திக்காமல் இருந்து வந்தார்.

இதை அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்- மந்திரிகள்கூட பிரதமரை சந்திக்கும் நிலையில் கூட்டணியில் இருந்துகொண்டு பிரதமரை சந்திக்க தயங்குவது ஏன்? என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

பட்ஜெட் தயாரிப்பு

இந்தநிலையில் புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றி தொடங்கி வைக்கிறார்.

யூனியன் பிரதேசம் என்பதால் புதுவை பட்ஜெட்டுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும். அதன்படி அதற்கான கோப்பு அனுப்பப்பட்டிருந்தநிலையில் இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை.

எனவே பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற முதல்-அமைச்சர் ரங்கசாமி நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். அவர் பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினார்.

அப்போது கடிதம் ஒன்றை ரங்கசாமி வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

நிதியுதவி குறைப்பு

கடந்த 2021-22-ம் நிதியாண்டில் மத்திய அரசின் நிதியுதவி ரூ.1,874 கோடியாக இருந்தது. ஆனால் இந்த நிதியாண்டில் (2022-23) மத்திய அரசின் நிதியுதவி 1,724 கோடியாக குறைந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டைவிட ரூ.150 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பின் மாநில வருவாய் கணிசமாக குறைந்துவிட்டது. ஜி.எஸ்.டி. இழப்பீட்டை நீடிக்கப்போவதில்லை என்று மத்திய அரசும் முடிவு செய்துள்ளது. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி அரசு ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை, போக்குவத்துப்படி, வீட்டு வாடகைப்படி, கல்விக்கட்டணம் ஆகியவையாக ரூ.186 கோடி வழங்கப்பட வேண்டியுள்ளது.

ரூ.2 ஆயிரம் கோடி

எனவே இந்த பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாக ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் நிதியுதவியாக வழங்கவேண்டும். இதனை கனிவுடன் பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story