மருந்து விற்பனை பிரதிநிதிக்கு சரமாரி கத்தி வெட்டு


மருந்து விற்பனை பிரதிநிதிக்கு சரமாரி கத்தி வெட்டு
x

வில்லியனூர் அருகே மருந்து விற்பனை பிரதிநிதியை சரமாரியாக கத்தியால் வெட்டிய போதை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வில்லியனூர்

வில்லியனூர் அருகே மருந்து விற்பனை பிரதிநிதியை சரமாரியாக கத்தியால் வெட்டிய போதை கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மருந்து விற்பனை பிரதிநிதி

வில்லியனூர் அருகே உள்ள கோபாலன் கடை அம்மா நகரை சேர்ந்தவர் மணி (வயது 28). இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது மனைவி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் மணி, தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டு, வெளிநாட்டில் உள்ள மனைவியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

கொலைவெறி தாக்குதல்

அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல், திடீரென்று மணியிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு, அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி, கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டது.

அவர்களிடம் இருந்து தப்பியோடிய மணி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றது.

கொலைவெறி தாக்குதலில் தலை மற்றும் கையில் வெட்டுக்காயமடைந்த மணியை அக்கம்பக்கத்தினர் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்க டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

போதை கும்பல்

இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோபாலன்கடை பகுதியை சேர்ந்த சதீஷ் (20), கலைக்குமார் (22), ஜெயபிரகாஷ் (22) மற்றும் 2 பேர் கஞ்சா போதையில் மணியை வெட்டியது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் நள்ளிரவில் போதை கும்பலால் தொழிலாளி ஒருவர் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story