சீர்திருத்தப்பள்ளி சிறுவர்களுக்கு டிரோன் பயிற்சி


சீர்திருத்தப்பள்ளி சிறுவர்களுக்கு டிரோன் பயிற்சி
x

வேலைவாய்ப்பளித்து நம்பிக்கையூட்டும் வகையில் சீர்திருத்தப்பள்ளியில் உள்ள சிறுவர்களுக்கு டிரோன் பயிற்சி அளிக்க யுவர் பேக்கர்ஸ் முன்வந்துள்ளது.

புதுச்சேரி

வேலைவாய்ப்பளித்து நம்பிக்கையூட்டும் வகையில் சீர்திருத்தப்பள்ளியில் உள்ள சிறுவர்களுக்கு டிரோன் பயிற்சி அளிக்க யுவர் பேக்கர்ஸ் முன்வந்துள்ளது.

திறமைக்கு ஊக்கம்

பிளாஸ்டிக் இல்லாத புதுச்சேரி என்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் யுவர் பேக்கர்ஸ் பவுண்டேசன் நிறுவனம் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எந்த துறையானாலும் அதில் சாதிக்க துடிப்பவர்களை தேர்ந்தெடுத்து ஊக்கமளிப்பதுடன், ஏழை மாணவர்களுக்கு கல்வி, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கைதூக்கி விடுவதில் முனைப்புடன் செயல்படுகிறது.

அந்த வகையில் மாணவர்கள், இளைஞர்களுக்காக டிரோன் பயிற்சி அளிப்பதில் யுவர் பேக்கர்ஸ் தனது கவனத்தை திருப்பி உள்ளது. இதற்காக அனுபவம் உள்ள பைலட்டுகள் மூலம் டிரோன் என்ஜினீயரிங், ஏரியல் சினிமோட்டோகிராபி, அக்ரி டிரோன் டிரைனிங், ஏரோ மாடலிங், டிரோன் பைலட்டிங் போன்ற பயிற்சிகளை குறைந்த காலத்தில் பயிற்றுவிக்கிறது.

பயிற்சி தொடங்கியது

இதிலும் சமூக நோக்குடன் புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து நல்வழிப்படுத்தும் வகையில் டிரோன் பயிற்சி அளிக்க யுவர் பேக்கர்ஸ் முன்வந்துள்ளது.

அதன்படி இதற்கான பயிற்சி அரியாங்குப்பத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் நேற்று தொடங்கியது. இதில் புதுவை முதன்மை மாஜிஸ்திரேட் ரமேஷ், யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ, யுகேன் பிளை நிர்வாக இயக்குனர் லட்சுமி நாராயணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிறுவர் சீர்திருத்தப்பள்ளியை சேர்ந்தவர்கள் டிரோன் பயிற்சி பெற்றனர்.

இதுகுறித்து யுவர் பேக்கர்ஸ் பவுண்டேசன் நிறுவனர் கிருஷ்ணராஜூ கூறியதாவது:-

நல்வழிப்படுத்தும் முயற்சி

குற்ற சாயல் இல்லாத இளைய சமுதாயத்தை உருவாக்குவதே யுவர் பேக்கர்சின் குறிக்கோள் ஆகும். குற்ற செயலுக்காக சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் இருப்பவர்களுக்கு வாழ்வாதாரம் அளித்து சம்பாதிக்கும் வகையில் திசை திருப்பினால் மீண்டும் தவறான பாதைக்கு அவர்கள் திரும்ப மாட்டார்கள்.

இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மாஜிஸ்திரேட் தலைமையில் டிரோன் பயிற்சி அளிக்க திட்டமிட்டு அதை தொடங்கி உள்ளோம். பயிற்சிக்கு பின் அவர்களுக்கு வேலைவாய்ப்பு தரவும் தயாராக உள்ளோம்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் 15 பேர் வீதம் அணி அணியாக இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 7 நாள் பயிற்சி முடிந்ததும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் வழி செய்வோம். இதற்காக அரசு அனுமதிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story