சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வகையில் விநாயகர் சிலைகள்


சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வகையில் விநாயகர் சிலைகள்
x

சதுர்த்தி விழாவையொட்டி சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வகையில் விநாயகர் சிலைகளை உருவாக்க வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி

சதுர்த்தி விழாவையொட்டி சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான வகையில் விநாயகர் சிலைகளை உருவாக்க வேண்டும் என மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் உத்தரவிட்டுள்ளது.

விநாயகர் சிலைகள்

புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான, மக்கக்கூடிய, குறைந்த உயரம் உடையதாகவும், களிமண் மற்றும் மண் போன்றவற்றை பயன்படுத்தி உருவாக்க வேண்டும். சிலைகளுக்கு மலர்களை பயன்படுத்தி ஆபரணங்கள் செய்யலாம் மற்றும் சிலைகளை கவர்ச்சிகரமாக ஒளிர செய்வதற்கு மரத்திலிருந்து சுரக்கும் பிசினை பயன்படுத்தலாம்.

ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளை உருவாக்க நச்சு மற்றும் எளிதில் மக்காத ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப்பூச்சுகள் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

அலங்கார ஆடைகள்

சிலைகளை அழகுப்படுத்துவதற்கு எளிதில் துவைக்கக்கூடிய அலங்கார ஆடைகளை பயன்படுத்த வேண்டும். அலங்கார ஆடைகளுக்கு வண்ணம் சேர்ப்பதற்கு பூக்கள், மரப்பட்டைகள், மகரந்தங்கள், இலைகள், வேர்கள், விதைகள், பழங்கள் மற்றும் வண்ண பாறைகள் ஆகியவற்றிலிருந்து இயற்கையாக தயாரிக்கப்பட்ட வண்ணங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

விநாயகர் உருவ சிலைகளை தயாரிப்பவர்கள் உள்ளாட்சி துறையில் (நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து) முன்பே பதிவுசெய்தல் வேண்டும். பாக்கு, வாழை இலைகள் மக்கும் காகிதக்கோப்பைகள், தட்டுகள் மற்றும் மண் பானைகள் போன்றவற்றை பிரசாதம் வினியோகத்திற்கும், பிற தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story