அகழாய்வு பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு


அகழாய்வு பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு
x

திருக்கனூர் அருகே பி.எஸ். பாளையத்தில் அகழாய்வு பணிக்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடக்கவிழா ரத்து செய்யப்பட்டதால் கல்லூரி மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

திருக்கனூர்

திருக்கனூர் அருகே பி.எஸ். பாளையத்தில் அகழாய்வு பணிக்கு விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடக்கவிழா ரத்து செய்யப்பட்டதால் கல்லூரி மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ஆய்வு செய்ய அரசு திட்டம்

புதுவை அரிக்கன்மேடு துறைமுக பகுதி கி.மு. 200 முதல் கி.பி. 200-ம் ஆண்டு வரை வெளிநாட்டு வாணிபத்தில் சிறந்து விளங்கி உள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கிடைத்த மணிகள், மண்பாண்ட ஓடுகள் மூலம் இங்கு கிரேக்கர்கள், ரோமானியர்கள் தங்கி ஏற்றுமதி, இறக்குமதி செய்தனர் என்பது தெரியவருகிறது.

ஆனால் அரிக்கேன்மேடு துறைமுகத்துக்கு எந்தெந்த பகுதியில் ஏற்றுமதி பொருட்கள் கொண்டுவரபட்டன என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆராய்ச்சி செய்வதற்காக அரிக்கன்மேடு காலத்தோடு தொடர்புடைய உள்ளூர் வணிக தலங்களை கண்டறிந்து ஆய்வு செய்ய புதுச்சேரி அரசு திட்டமிட்டுள்ளது.

தொடக்க விழா

அதன்படி திருக்கனூரை அடுத்த பி.எஸ்.பாளையம் கோட்டைமேடு பகுதியில் உள்ள பம்பை ஆற்றின் கரையோரம் கி.பி. 1-ம் நூற்றாண்டில் பயன்படுத்திய பாண்டங்கள் உறை கிணறு, பழங்கால செங்கற்கள் உள்பட பல்வேறு பொருட்களின் சிதறல்கள் கண்டறியப்பட்டதாகவும் இதன்மூலம் கோட்டைமேடு பகுதிக்கும், அரிக்கன்மேட்டிற்கும் தொடர்பு இருக்கலாம் என கருதப்பட்டது.

இதைத்தொடர்ந்து அங்கு ஆய்வுகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு முதல்கட்டமாக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்காக தொல்லியல் அனுமதியும் பெறப்பட்டுள்ளது.

இதன் தொடக்க விழா இன்று காலை நடத்தவும் விழாவில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திரபிரியங்கா ஆகியோர் தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக புதுவை தாகூர் கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் இன்று காலை பி.எஸ்.பாளையம் கோட்டைமேடு பகுதிக்கு வந்திருந்தனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு

இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இப்பகுதியில் அகழாய்வு மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்தனர்.

இப்பகுதியில் அகழாய்வு பணிகள் மேற்கொண்டால் 200 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படும் மேலும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளும் இடம் தமிழக அரசை சேர்ந்தது ஆகும். எனவே அந்த அரசிடம் இது தொடர்பாக ஆலோசிக்காமலும் சம்பந்தப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் புதுவை அரசு எந்த கருத்தையும் கேட்கவில்லை என கூறி அப்பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர்.

இதுபற்றி தெரியவந்ததும் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேசு்சுவார்த்தை நடத்தினர்.

அகழாய்வு பணி மேற்கொள்வது குறித்து பொதுமக்களின் கருத்தை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மாணவர்கள் ஏமாற்றம்

இந்தநிலையில் இன்று காலை நடைபெற இருந்த அகழாய்வு பணி தொடக்க விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் அகழாய்வு பணிகள் மேற்கொள்ள வந்த தாகூர் கலைக்கல்லூரி மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.


Next Story