பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்


பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்
x

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி நடுரோட்டில் பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி நடுரோட்டில் பாலை கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொள்முதல் விலை...

புதுவையில் சமீபத்தில் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்த்தப்பட்டது. கொள்முதல் விலையானது லிட்டர் ரூ.34-ல் இருந்து ரூ.37 ஆக உயர்த்தப்பட்டது.

ஆனால் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 45 ரூபாய் உயர்த்த வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். பால் உற்பத்தியாளர் சங்கத்தில் பால் ஊற்றுபவர்களுக்கு இலவச கறவை பசு வழங்கவேண்டும். ஊக்கத்தொகையாக லிட்டருக்கு ரூ.5 வழங்கவேண்டும், பாண்லே உள்பட அனைத்து கூட்டுறவு சங்கத்துக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்பட 17 கோரிக்கைகளை புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

ஊர்வலம்

இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் சட்டசபை முன்பு பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதற்காக அவர்கள் சுதேசி மில் அருகே இன்று காலை கூடினார்கள்.

அங்கிருந்து சட்டசபை நோக்கி பால் கேன்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு புதுச்சேரி பால் உற்பத்தியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கீதநாதன், பொதுச்செயலாளர் பெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

பாலை கொட்டி...

ஊர்வலம் மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலை அருகே வந்தபோது அதற்கு மேல் செல்லவிடாமல் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து ஊர்வலமாக வந்தவர்கள் பாலை தரையில் கொட்டி போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் ஆறுமுகம், வீரப்பன், ஆனந்தன், பாண்டுரங்கன், கணேசன், ராஜேந்திரன், நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story