திருபுவனையில் சர்வீஸ் ரோடு இல்லாமல் கட்டப்படும் மேம்பாலம்


திருபுவனையில் சர்வீஸ் ரோடு இல்லாமல் கட்டப்படும் மேம்பாலம்
x

திருபுவனையில் சர்வீஸ் ரோடு இல்லாமல் மேம்பாலம் கட்டப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருபுவனை

திருபுவனையில் சர்வீஸ் ரோடு இல்லாமல் மேம்பாலம் கட்டப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

முழுவீச்சில் பணிகள்

விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே புதுச்சேரி 4 வழிச்சாலை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக பள்ளி, கோவில்கள், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.

இதற்கிடையே திருபுவனை ஏரிக்கரையில் உள்ள சுமார் 800 பனை மரங்களை அப்புறப்படுத்தவும் திட்டமிடப்பட்டது. இதுகுறித்து தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் பனை மரங்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள நீர் நிலைகள் இதில் இருந்து தப்பாது என்ற நிலை தொடர்ந்ததால் இதற்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டது.

தொடர்ந்து எம்.என்.குப்பத்தில் இருந்து கெங்கராம்பாளையம் வரை இரவு- பகலாக முழு வீச்சில் சாலை அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு பாதிப்பு

இந்தநிலையில் திருபுவனை ஏரிக்கரை பனை மரங்களை வெட்டவும், நீர்நிலைகளை அப்புறப்படுத்தவும் தேசிய பசுமை ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டது.

இதையடுத்து பனை மரங்கள் உள்ள சாலை ஓரம் மேம்பால தூண்கள் அமைக்கப்பட்டு சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டால் திருபுவனை மற்றும் அதனை சார்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம சாலைகள் துண்டிக்கும் நிலை உள்ளது.

திருவண்டார் கோவிலில் சர்வீஸ் ரோடு அமைத்து மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றது. ஆனால் திருபுவனையில் சர்வீஸ் ரோடு இல்லாமல் மேம்பாலம் அமைக்கப்படுவதால் எதிர்காலத்தில் பொதுமக்கள் அல்லல்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். திருபுவனைவாசிகள் திருவண்டார் கோவில் சர்வீஸ் ரோட்டை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுவதுடன்அன்றாட வேலைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மேம்பால பணிகளை நிறுத்தி திருபுவனைக்கு செல்ல சர்வீஸ் ரோடு அமைத்த பின் மேம்பால பணிகளை தொடர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.


Next Story