தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்க வைத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்


தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்க வைத்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
x

ஜிப்மரில் நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததை சுட்டிக்காட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இசைக்க வைத்தார்.

புதுச்சேரி

ஜிப்மரில் நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததை சுட்டிக்காட்டி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இசைக்க வைத்தார்.

தொடரும் சர்ச்சைகள்

புதுவை ஜிப்மரில் தமிழ் புறக்கணிக்கப்படுவதாக சர்ச்சை இருந்து வருகிறது. இதன் இயக்குனராக ராகேஷ் அகர்வால் பதவியேற்ற பின் அடிக்கடி இதுபோன்ற குளறுபடிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் ஜிப்மர் சுற்றறிக்கைகள், கோப்புகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும் என்று அவர் வெளியிட்ட உத்தரவு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்தன. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலையிட்டு அப்போது பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்தார்.

சர்தேச சுகாதார பள்ளி

இந்தநிலையில் ஜிப்மரில் இன்று ரூ.65.6 கோடியில் சர்வதேச பொது சுகாதார பள்ளியை நாட்டுக்கு அர்ப் பணிக்கும் விழா நடந்தது. இதை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.பி.க்கள் செல்வகணபதி, வைத்திலிங்கம், ஏ.கே.டி.ஆறுமுகம் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சுட்டிக்காட்டிய கவர்னர்

விழா தொடங்கியதும், வழக்கமாக ஜிப்மர் விழாக்களில் பாடப்படும் தன்வந்திரி கீதம் பாடப்பட்டது. ஆனால் வழக்கம் போல் அரசு விழாக்களில் இடம் பெறுவது போல் மரபுப்படி தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை.

தொடர்ந்து விழாவில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா பேசி விட்டு அமர்ந்தார். அப்போது மேடையில் இருந்து எழுந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், விழா தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி விழா தொடங்காதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவர் சுட்டிக்காட்டியபடி தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன்பின் தேசியகீதத்துடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

தமிழ்த்தாய் இசைக்கப் படுவதன் முக்கியத்துவம் குறித்து மேடையில் இருந்த மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியாவிடம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனியாக விளக்கினார்.


Next Story