அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலர் திடீர் ஆய்வு


அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலர் திடீர் ஆய்வு
x

காய்ச்சலால் மேலும் 730 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி

காய்ச்சலால் மேலும் 730 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

730 குழந்தைகளுக்கு பாதிப்பு

புதுவையில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் (ப்ளூ வைரஸ்) பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று சளி, காய்ச்சலுக்காக மட்டும் 730 குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் இந்திராகாந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 62 பேர், ராஜீவ்காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 594 பேர், காரைக்கால் அரசு மருத்துவமனையில் 74 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இவர்களில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 7, ராஜீவ்காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 47, காரைக்கால் அரசு மருத்துவமனையில் 5 பேர் என 59 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாரி திடீர் ஆய்வு

இந்தநிலையில் சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று காலை சுகாதாரத்துறை இயக்குனர் உதயகுமார் திடீர் ஆய்வு நடத்தினார்.

அப்போது, காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து பணியில் இருந்த மருத்துவ கண்காணிப்பாளர் சுஜாதா, டாக்டர்களிடம் கேட்டதுடன் குழந்தைகள் சிகிச்சையில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.

நடவடிக்கை

இதேபோல் வில்லியனூர், மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம், ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வருகின்றனரா? என கேட்டறிந்தார். பணியில் அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.


Next Story