குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்ந்த 2 பேர் மீது வழக்கு


குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்ந்த 2 பேர் மீது வழக்கு
x

குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த புதுவை, காரைக்காலை சேர்ந்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி

குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த புதுவை, காரைக்காலை சேர்ந்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குழந்தைகளின் ஆபாச படம்

இந்தியாவில் தான் அதிகம் பேர் ஆபாச படங்களை பார்ப்பதாகவும், குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் பேர் பார்ப்பதாகவும், குழந்தைகளின் ஆபாச படங்கள் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அமெரிக்க புலனாய்வுத்துறை மத்திய உள்துறைக்கு தகவல் அனுப்பியது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்களின் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் ஐ.பி. முகவரி அடங்கிய பட்டியல் மத்திய உள்துறை சார்பில் தமிழக காவல்துறைக்கு அனுப்பப்பட்டது. அவர்களை கைது செய்து தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

2 பேர் மீது வழக்கு

இந்தநிலையில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் குழந்தைகளின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வாட்ஸ்-அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளம் வழியாக பகிர்வோர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது.

அந்த வகையில் புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த 2 பேர் குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எச்சரிக்கை

இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீர்த்தி கூறுகையில், 'குழந்தைகளின் ஆபாச படங்களை பதவிறக்கம் செய்வதும், அதனை மற்றவர்களுக்கு அனுப்புவதும் குற்றமாகும். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் செல்போனில் ஆபாச படம் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்தவர்கள், அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்தவர்கள் பீதி அடைந்து உள்ளனர்.


Next Story