அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம்


அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம்
x

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

புதுச்சேரி

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டத்தை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

ஊட்டச்சத்து பானம்

புதுவை அரசின் கல்வித்துறை மற்றும் ஸ்ரீ சத்தியசாய் அறக்கட்டளை சார்பில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் புதுவை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலையில் ஊட்டச்சத்து பானம் வழங்கப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கல்வித்துறை செயலாளர் ஜவகர் வரவேற்று பேசினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானங்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

கவர்னர் தமிழிசை

அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்கவேண்டும் என்று பிரதமரும் கூறியுள்ளார். நிறைய குழந்தைகள் போதிய சத்தான உணவு இல்லாமல் வளர்ச்சி குன்றியுள்ளனர். இதுபோன்ற சத்துணவு கிடைப்பதால் அவர்களுக்கு போதுமான வளர்ச்சி கிடைக்கும். இதுதான் நாம் எதிர்கால தலைமுறையினருக்கு அளிக்கும் முதலீடு.

புதிய கல்விக்கொள்கை குழந்தைகளுக்கு கல்வியோடு ஊட்டச்சத்தையும் வழங்குவதை வலியுறுத்துகிறது. புதுச்சேரியில் உள்ள கர்ப்பிணிகள், கிராமப்புறங்களில் உள்ள ஏழை, எளிய குழந்தைகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

ரங்கசாமி

முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

புதுவை மாநிலத்தை பொறுத்தவரை குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்கவேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். காலையில் ரொட்டி, பால், பிஸ்கெட், பழம், மதியம் உணவு, சுண்டல் என வழங்கி வருகிறோம். காலை சிற்றுண்டி திட்டமும் தொடங்கப்பட்டது. ஊட்டச்சத்து கிடைப்பததால் மாணவர்களும் திடகாத்திரமாக உள்ளனர். கல்வி மூலம் வலிமையான இந்தியா உருவாகவேண்டும் என்ற பிரதமரின் எண்ணம் நிறைவேற வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீசத்திய சாய் அறக்கட்டளையின் நிறுவனர் சற்குரு மதுசூதன் சாய், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி உள்பட பலர் கலந்துகொண்னடர்.

12-ம் வகுப்பு வரை...

இந்த திட்டத்தின்படி புதுவை மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 20 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு காலையில் வழங்கப்படும் பாலுடன் சத்தான பவுடர் கலக்கப்பட்டு ஊட்டச்சத்து பானம் வழங்கப்படுகிறது. இந்த ஊட்டச்சத்து பானத்தை 12-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 75 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கும் வழங்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


Next Story