மின்துறை ஊழியர்களை கைது செய்ய உத்தரவு


மின்துறை ஊழியர்களை கைது செய்ய உத்தரவு
x

வயர்களை துண்டித்தும், பியூஸ் கேரியர்களை எடுத்து சென்றும் செயற்கையாக மின்தடை ஏற்படுத்தும் ஊழியர்களை கைது செய்ய அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி

வயர்களை துண்டித்தும், பியூஸ் கேரியர்களை எடுத்து சென்றும் செயற்கையாக மின்தடை ஏற்படுத்தும் ஊழியர்களை கைது செய்ய அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

மின்வெட்டு பிரச்சினை தொடர்பாக தலைமை செயலர் ராஜீவ் வர்மா, அரசு செயலர் அருண், போலீஸ் டி.ஜி.பி. மனோஜ்குமார் லால் ஆகியோருடன் புதுச்சேரி சட்டசபையில் உள்ள அமைச்சர் நமச்சிவாயம் அலுவலகத்தில் நமச்சிவாயம் இன்று இரவு ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.

கூட்டம் முடிவில் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிம் கூறியதாவது:-

செயற்கை மின்தடை

மின்துறை தனியார் மயத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசு சார்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் யாரும் கலந்துகொள்ளவில்லை. அரசு கொள்கை முடிவை எடுத்து மின்துறையை தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்தபின்பு கடந்த 3 நாட்களாக பல்வேறு இடங்களில் மின்துறை ஊழியர்கள் வேண்டும் என்றே செயற்கையாக மின் தடையை ஏற்படுத்தினார்கள்.

அதனை அரசு பொறுத்துக்கொண்டு, மின் தடையை சரி செய்து மக்களுக்கு மின் வினியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டது.

கைது செய்ய உத்தரவு

இந்ந சூழ்நிலையில் இன்று மாலையில் மின்துறை ஊழியர்கள் சிலர் வில்லியனூர், பாகூர், தொண்டமாநத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்துறை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள மின்வயர்களை துண்டித்து, பியூஸ் கேரியர்களை பிடுங்கி கையோடு எடுத்து சென்றுவிட்டனர்.

இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தடைபட்ட மின்சாரத்தை உடனடியாக கொடுப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்கள் தயவு செய்து அமைதி காத்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு செய்த மின்துறை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கும். அவர்களை கைது செய்வதற்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின்துறை ஊழியர்கள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தலாம். ஆனால், திட்டமிட்டு செய்யும் செயலை பொறுத்து கொள்ள முடியாது.

பவர் கிரீட் அதிகாரிகள் வருகை

மக்களுக்கு தீங்கு, தொல்லை தருகின்ற செயலை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. தொடர்ந்து மின்தடை ஏற்படாத அளவுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. துணைமின் நிலையங்களில் மின்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மின்வெட்டு பிரச்சினை தீர்க்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசின் பவர்கிரீட்டில் இருந்து 24 அதிகாரிகள் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். பவர்கிரீட் அதிகாரிகள் துணை மின் நிலையங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆதரவு வேண்டாம்

போதிய போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டு உள்ளது.பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மின்துறை ஊழியர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள், எதிரக்்கட்சிகள் ஆதரவு தர வேண்டாம். ஆதரவு தருவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இந்த விஷயத்தில் அவர்கள் அரசியல் செய்ய வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story