பொது சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்க்கவே கவர்னருக்கு அதிகாரம்


பொது சொத்துக்களை தனியாருக்கு தாரைவார்க்கவே கவர்னருக்கு அதிகாரம்
x

பொது சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கவே கவர்னருக்கு நில அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி

பொது சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்கவே கவர்னருக்கு நில அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்களை உருவாக்க முடியாது. இந்த திட்டத்தில் 6 மாத பயிற்சி பெற்றவர்களை 3½ ஆண்டுகள் பணி முடித்த பின்னர் வீட்டுக்கு அனுப்பி விடுவோம் என்கிறார்கள். இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். இதனை எதிர்த்து புதுவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நாளை (அதாவது நாளை) போராட்டம் நடைபெறும்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கவர்னர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள், 100 சதவீதம் மானியத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவாதித்தனர். அப்போது கவர்னருக்கு நில உரிமை அதிகாரத்தை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசமாக இருந்தாலும் கூட அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மாநிலம். முதல்-அமைச்சர், அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்த கவர்னருக்கு அதிகாரம் கிடையாது.

பொது சொத்து தாரைவார்ப்பு

இந்த கூட்டத்தை முதல்-அமைச்சர் தான் நடத்தியிருக்க வேண்டும். நிலம் சம்பந்தமான பிரச்சினைகளில் முடிவு எடுக்கிற அதிகாரம் அமைச்சரவைக்கு உண்டு. புதுச்சேரியில் பட்டா மாற்றம், நிலத்தை மற்றவர்களுக்கு கொடுக்கும் அதிகாரம், உபரி நிலத்தை நில உரிமையாளரிடம் பெற்று ஏழைகளுக்கு கொடுக்கும் அதிகாரம், பல ஆண்டுகளாக ஒரு இடத்தில் குடியிருப்பவருக்கு அந்த சொத்தை அவருக்கு உரிமைப்படுத்தி கொடுக்கும் அதிகாரம் என்று 4 சட்டங்கள் அமலில் உள்ளன. புதுவை மாநிலத்தில் பொது சொத்துக்கள் அதிகம் உள்ளன.

எனக்கு கிடைத்த தகவல் படி பொது சொத்துகளை தனியாருக்கு தாரைவார்த்து கொடுப்பதற்காகவே கவர்னருக்கு நில அதிகாரத்தை கொடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் சேதராப்பட்டில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க 800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது அந்த நிலத்தை கபளீகரம் செய்யும் வேலை நடந்து வருகிறது. புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அதிகாரத்தை முழுமையாக கவர்னரிடம் விட்டு கொடுத்து விட்டார்.

கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்

இதனை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். புதுச்சேரி மக்களின் சொத்தை யாராவது கபளீகரம் செய்ய நினைத்தால் அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story