பழுக்க வைத்த 1 டன் மாம்பழம் பறிமுதல்


பழுக்க வைத்த 1 டன் மாம்பழம் பறிமுதல்
x

புதுச்சேரியில் ரசாயன பொடியை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப் பட்டது.

புதுச்சேரி

புதுச்சேரியில் ரசாயன பொடியை பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட 1 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப் பட்டது.

அதிகாரிகள் சோதனை

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் ரசாயன பொடியை பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் ஊழியர்கள் மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று மதியம் திடீரென பெரிய மார்க்கெட் பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஒரு குடோனில் சுமார் 1 டன் அளவுக்கு மாம்பழம் ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் அந்த மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

வியாபாரிகள் ஓட்டம்

இதனை பார்த்த உடன் அருகில் உள்ள மாம்பழ குடோனில் இருந்தவர்கள் தங்கள் குடோன்களை அடைத்து விட்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) அழிக்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பாலகிருஷ்ணன் கூறுகையில், 'மாம்பழங்களை ரசாயன பொடியை பயன் படுத்தி செயற்கையான முறையில் பழுக்க வைப்பது சட்டப்படி குற்றமாகும். நாங்கள் இனிமேல் தொடர்ந்து சோதனை செய்வோம். இது போல் யாராவது மாம்பழங்களை பழுக்க வைப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் புதுச்சேரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக முகாமிட்டு ஓட்டல்கள், சாலையோர உணவகங்கள், மளிகை மற்றும் பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவகத்தின் வெளியே சுத்தமாக இருந்தாலும், சமைக்கும் அறை, கழிவறை மிகவும் அசுத்தமாக இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பல உணவகங்களில், குளிர்சாதன பெட்டியை ஆய்வு செய்தபோது கெட்டுப்போன ஆடு, கோழி இறைச்சி மற்றும் காலா வதியான உணவு பொருட்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்தனர். இந்த ஆய்வின்போது நகராட்சி ஆணையர் செந்தில்நாதன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.


Next Story