எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை


காரைக்காலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதோடு, 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

காரைக்கால்

காரைக்காலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதோடு, 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

என்.ஐ.ஏ. சோதனை

புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது பயங்கரவாத குழுவுக்கு நிதி திரட்டி வருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து கேரளா, தமிழ்நாடு, காரைக்காலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் இன்று தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தோமாஸ் அருள் வீதி, காமராஜர் சாலை, திரு-பட்டினம் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் 8 பேர் கொண்ட குழுவினர் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இவர்களுக்கு பாதுகாப்பாக காரைக்கால் மாவட்ட போலீசார் உடன் இருந்தனர்.

3 பேர் கைது

சோதனையின் முடிவில் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதையடுத்து புதுச்சேரி மாநில எஸ்.டி.பி.ஐ. கட்சி துணைத் தலைவர் பிலால், கவ்ஸ், பக்ருதீன் ஆகிய 3 பேரை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே என்.ஐ.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் மீது பொய்யான வழக்கு போட்டு இருப்பதாகவும், அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் காரைக்காலில் இன்று பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்காலில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியதும், இதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story