மத்திய அரசு அளித்த நிதியை திருப்பி அனுப்பியுள்ளனர்


மத்திய அரசு அளித்த நிதியை திருப்பி அனுப்பியுள்ளனர்
x

புதுவை அரசுக்கு ஒருசில அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் மத்திய அரசு வழங்கிய நிதியை திருப்பி அனுப்பியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி

புதுவை அரசுக்கு ஒருசில அதிகாரிகள் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் மத்திய அரசு வழங்கிய நிதியை திருப்பி அனுப்பியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

புதுவை சபாநாயகர் செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிதியை திருப்பி அனுப்பினர்

புதுவை அரசு நிர்வாகத்தில் ஒருசில அதிகாரிகள் அரசுக்கு சரியான முறையில் ஒத்துழைப்பு தருவதில்லை. பலமுறை எச்சரித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சரின் அனுமதியோடு அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை இருக்கும்.

அதிகாரிகள் சரிவர செயல்படாததால் மத்திய அரசின் ஜல்சக்தி திட்டத்தின்கீழ் வந்த நிதியை திருப்பி அனுப்பி உள்ளனர். இந்த திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.33 கோடியை வழங்கியது. அதில் ரூ.1 கோடியை மட்டும் செலவு செய்துவிட்டு மீதியை திருப்பி அனுப்பி உள்ளனர்.

தலைமை செயலாளர் பொறுப்பு

ஊரக வளர்ச்சித்துறையில் பிரதமரின் சாலை அமைப்பு திட்டத்தின்கீழ் தமிழகத்தில் நல்ல முறையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் புதுவையில் அதிகாரி களின் செயல்பாடு சரியில்லாததால் பணிகள் சரிவர செய்யப்படவில்லை. இப்போது அது சரிசெய்யப்பட்டு 125 கி.மீ. கிராமப்புற சாலைகள் அமைக்க ரூ.48 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள 108 கிராம பஞ்சாயத்துகளில் 10 கிராமங்களில் மட்டும்தான் 100 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தவறுக்கு தலைமை செயலாளர்தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.

புதிய சட்டசபை கட்டிடம்

புதுவையில் புதிய சட்டசபை கட்டிடம் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக முதல்கட்டமாக ரூ.10 கோடியை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒதுக்கி உள்ளார்.

20 ஆண்டுகளுக்கு பிறகு திருத்திய மதிப்பீட்டில் மத்திய அரசு புதுச்சேரிக்கு ரூ.1,400 கோடி வழங்கியுள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதிபெற்று செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கான செலவுகளுக்கு சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. இதனால் அடுத்து பல திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை இருந்தது.

மாநில அந்தஸ்து

தணிக்கைத்துறையில் 2015 முதல் 2018 வரையிலான 526 கேள்விகளுக்கு இப்போது பொதுக்கணக்குழு மூலம் பதில் அளித்து உள்ளோம். இன்னும் 200 கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டி உள்ளது. அவற்றை அளிக்கும்போது மத்திய அரசிடமிருந்து கூடுதலாக நிதி கிடைக்கும்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவது தொடர்பாக முதல்-அமைச்சர்தான் முடிவு செய்வார். அரசு தீர்மானம் கொண்டு வந்தால் அதை அனுமதிக்க வேண்டிய பொறுப்பு சபாநாயகருக்கு உள்ளது.

இவ்வாறு சபாநாயகர் செல்வம் கூறினார்.

பேட்டியின்போது சட்டசபை செயலாளர் தயாளன் உடனிருந்தார்.


Next Story