ஜாமீனில் வந்து மனைவியை கொன்று புதைத்த ரவுடி


புதுவையில் ஜாமீனில் வந்து மனைவியை கொன்று புதைத்த ரவுடி கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார். 9 ஆண்டுகளுக்கு முன் பெண் மாயமானதாக கருதப்பட்ட வழக்கில் துப்பு துலங்கிய இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

புதுச்சேரி

புதுவையில் ஜாமீனில் வந்து மனைவியை கொன்று புதைத்த ரவுடி கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார்.

9 ஆண்டுகளுக்கு முன் பெண் மாயமானதாக கருதப்பட்ட வழக்கில் துப்பு துலங்கிய இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திடீர் மாயம்

புதுவை முதலியார்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது45). பிரபல ரவுடி. இவரது மனைவி எழிலரசி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2009-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் பாஸ்கர் கைதானார். அதன்பின் அவர் கடந்த 2016-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து பாஸ்கரின் மனைவி எழிலரசி திடீரென்று மாயமானார்.

இதுகுறித்து அவரின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் மாயமான எழிலரசியை தேடினார்கள். ஆனால் அவரை பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதனால் இந்த வழக்கை போலீசார் மூடி வைத்தனர். இந்தநிலையில் சமீபத்தில் உழந்தை ஏரிக்கரையை பலப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக அங்கு குழிதோண்டும் பணி நடந்தது.

எலும்புக்கூடுகளை ஏரியில் வீசினார்

இதை அறிந்த பாஸ்கர் பதறிப்போனார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த இடத்தை தோண்டி அதில் இருந்த எலும்பு கூடுகளை எடுத்து அருகில் இருந்த உழந்தை ஏரியில் வீசி விட்டு எதுவும் தெரியாதது போல் பாஸ்கர் இருந்து வந்தார்.

இதற்கிடையே முதலியார்பேட்டை போலீசுக்கு பாஸ்கர் உழந்தை ஏரி பகுதியில் இருந்து அவசர அவசரமாக குழிதோண்டி எலும்புக்கூடுகளை எடுத்து வீசியது பற்றி தெரியவந்தது.

இதை துருப்பு சீட்டாக பயன்படுத்தி போலீஸ் விசாரணையை முடுக்கி விட்டது. அப்போது தான் காணாமல் போன எழிலரசியை தான் பாஸ்கர் கொலை செய்து விட்டு ஏரி பகுதியில் உடலை புதைத்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இதையடுத்து எழிலரசி மாயமான வழக்கில் 9 ஆண்டுகளுக்கு பிறகு போலீசுக்கு துப்பு துலங்கியது.

மனைவியை பாஸ்கர் கொலை செய்தது ஏன்? என்பது குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல் குறித்த போலீசார் தெரிவித்ததாவது:-

ஜாமீனில் வந்த போது கொலை

ஏற்கனவே கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பாஸ்கர் கடந்த 2013-ம் ஆண்டில் ஜாமீனில் வந்துள்ளார். அப்போது அவருக்கு தனது மனைவி மீது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி நைசாக பேசி எழிலரசியை ஒரு காரில் ஏற்றிக்கொண்டு உழந்தை ஏரிக்கு அழைத்து வந்தார். அங்கு வந்தவுடன் காருக்குள்ளேயே எழிலரசியின் கழுத்தை நெரித்து பாஸ்கர் கொலை செய்து அந்த இடத்திலேயே குழிதோண்டி உடலை புதைத்தார்.

அப்போது பாஸ்கருக்கு அவரது கூட்டாளிகளான ரவுடிகள் வேல்முருகன் (36), சரவணன் (34), மனோகர் (32) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

போலீசுக்கு பயந்து...

அதன்பிறகு மீண்டும் சிறைக்கு சென்று பழைய கொலைக்கான தண்டனை முடிந்து 2016-ம் ஆண்டு பாஸ்கர் வெளியேவந்தார். அப்போது முதல் தினமும் இரவில் தனது கூட்டாளிகளான வேல்முருகன், சரவணன், மனோகர் ஆகியோருடன் சேர்ந்து அந்த பகுதியில் மது குடிப்பதை பாஸ்கர் வாடிக்கையாக வைத்து இருந்தார்.

இந்தநிலையில் தான் உழந்தை ஏரி பலப்படுத்துவது தொடர்பான தகவல் அறிந்து போலீசில் சிக்கிக்கொள்வோம் என பயந்து அவசர அவசரமாக அங்கு குழி தோண்டி எழிலரசியின் எலும்புக்கூடுகளை எடுத்து அப்புறப்படுத்திய போது போலீஸ் பிடியில் பாஸ்கர் கூட்டாளிகளுடன் வசமாக சிக்கினார்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

கணவர் உள்பட 4 பேர் கைது

இந்த பயங்கர சம்பவம் தொடர்பாக ரவுடிகளான பாஸ்கர் அவரது கூட்டாளிகள் வேல்முருகன், சரவணன், மனோகர் ஆகியோரை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்தனர். அடுத்த கட்டமாக எழிலரசியின் எலும்புக் கூடுகள் எங்கே வீசப்பட்டது? அவர் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி வேறு எதுவும் தடயம் சிக்குமா? என்பது குறித்து முதலியார்பேட்டை போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.

9 ஆண்டுகளுக்கு முன் மாயமானதாக கருதப்பட்ட பெண் ரவுடியான அவரது கணவராலேயே கொலை செய்யப்பட்டது அம்பலமானது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story