பெண்ணின் எலும்புகளை தேடும் பணி தீவிரம்


பெண்ணின் எலும்புகளை தேடும் பணி தீவிரம்
x

புதுவையில் கொலை செய்து ஏரியில் வீசப்பட்ட பெண்ணின் எலும்புகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி

புதுவையில் கொலை செய்து ஏரியில் வீசப்பட்ட பெண்ணின் எலும்புகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பெண் கொலை

புதுச்சேரி முதலியார்பேட்டை அனிதா நகரை சேர்ந்தவர் பாஸ்கர் என்கிற சுப்பிரமணியன் (வயது 45), பிரபல ரவுடி. இவரது மனைவி எழிலரசி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 2009-ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் பாஸ்கர் கைது செய்யப்பட்டு, காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 2013-ம் ஆண்டு பரோலில் அவர் வெளியே வந்தார். அப்போது மனைவி எழிலரசி நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இந்தநிலையில் தனது மனைவியை உழந்தை ஏரி பகுதிக்கு அழைத்து சென்று அங்கு காரில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை அங்கேயே குழிதோண்டி புதைத்துள்ளார். இதற்கு அவரது கூட்டாளி களான ரவுடிகள் வேல் முருகன் (36), சரவணன் (34), மனோகர் (32) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

கணவர் உள்பட 4 பேர் கைது

இதற்கிடையே எழிலரசி திடீரென்று மாயமானது குறித்து அவரின் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து எழிலரசியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு எழிலரசி வழக்கில் துப்பு துலங்கியது. இது தொடர்பாக பாஸ்கரை பிடித்து விசாரணை நடத்தியதில், கடந்த 2013-ம் ஆண்டு சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த பாஸ்கர், எழிலரசியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பாஸ்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரை கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

எலும்புகள் தேடும் பணி தீவிரம்

இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் இனியன் ஆகியோர் உழந்தை ஏரியில் எழிலரசியின் எலும்புகளை தேட முடிவு செய்தனர். இதற்காக பொக்லைன் எந்திரம் உதவியுடன் அங்கு இருந்து ஆகாய தாமரை செடிகள் அகற்றப்பட்டன. பின்னர் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் கவச உடை அணிந்து ஏரிக்குள் இறங்கினர். சுமார் 2 மணி நேரம் தேடியும் எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையே தற்போது சிறையில் உள்ள 4 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முதலியார்பேட்டை போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story