அடுத்த மாதம் முதல் ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு இருக்காது


அடுத்த மாதம் முதல் ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு இருக்காது
x

அடுத்த மாதம் முதல் ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு இருக்காது என மத்திய மந்திரியுடன் ஆலோசனைக்குப் பின், புதுவை பா.ஜனதா தலைவர் மற்றும் அமைச்சர் கூட்டாக தெரிவித்தனர்.

புதுச்சேரி

அடுத்த மாதம் முதல் ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு இருக்காது என மத்திய மந்திரியுடன் ஆலோசனைக்குப் பின், புதுவை பா.ஜனதா தலைவர் மற்றும் அமைச்சர் கூட்டாக தெரிவித்தனர்.

மத்திய மந்திரியுடன் ஆலோசனை

புதுச்சேரி பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.

இதில், மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது புதுச்சேரியில் பா.ஜனதா கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் பா.ஜ.க. தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

தட்டுப்பாடு இருக்காது

ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா ஆய்வு நடத்தினார். மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது மருந்து தட்டுப்பாட்டை போக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜிப்மர் இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசின் மருந்து நிறுவனங்களில் இருந்து உடனடியாக ஆர்டர் கொடுத்து, மருந்துகள் வாங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். எனவே, அடுத்த மாதம் (ஜூலை) முதல் ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாட்டு இருக்காது.

ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இருதய நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சைக்கு ஓரிரு மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அவர்களுக்கு காலதாமதமின்றி சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள், உபகரணங்களை மத்திய அரசு வழங்க தயாராக இருப்பதாகவும் மத்திய மந்திரி உறுதி அளித்தார். மேலும், ஜிப்மரில் நோயாளிகளின் படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்கவும், காரைக்கால் ஜிப்மர் கிளை கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் உத்தர விடப்பட்டுள்ளது.

கடிதம்

முதல்-அமைச்சர் ரங்கசாமி, மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு புதுச் சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு ஆஸ்பத்திரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். சுகாதாரத்துறைக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும். புதுவையில் மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என கடிதம் கொடுத்துள்ளார். மாநிலத்திற்கு தேவையான நிதி, மத்திய அரசின் ஒப்புதல் வழங்க அனைத்து நடவடிக்கை எடுப்பதாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா உறுதி அளித்துள்ளார்.

வருகிற 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை ஐதராபாத்தில் பா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story