அமலாக்கத்துறை மூலம் பொய் வழக்கு போடுகிறார்கள்


அமலாக்கத்துறை மூலம் பொய் வழக்கு போடுகிறார்கள்
x

மத்திய அரசுக்கு எதிராக போராடினால் அமலாக்கத்துறையை வைத்து பொய்வழக்கு போடுகிறார்கள் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி

மத்திய அரசுக்கு எதிராக போராடினால் அமலாக்கத்துறையை வைத்து பொய்வழக்கு போடுகிறார்கள் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பொய் வழக்கு

புதுவையில் மத்திய அரசுக்கு எதிராக இன்று போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்தின்போது முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டில் தற்போது சர்வாதிகாரம் தலைதூக்கி உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் அமலாக்கத்துறையை வைத்து பொய் வழக்கு போட்டு கைது நடவடிக்கை எடுக்கிறார்கள். அரிசி, பால், தயிர் என ஒவ்வொன்றுக்கும் ஜி.எஸ்.டி. வரிபோட்டு விலைவாசியை ஏற்றிவிட்டார்கள்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார் பிரதமர் மோடி. ஆனால் தற்போது பலரும் வேலைவாய்ப்பை இழந்து வருகிறார்கள்.

ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை

ஜனநாயகத்தின் மீது பிரதமர் மோடிக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை. நாட்டில் தற்போது அராஜக ஆட்சி நடக்கிறது. மக்களை கிள்ளுக்கீரையாக நினைக்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர்களை திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு எல்லாம் முடிவு கட்டும் காலம் வந்துகொண்டிருக்கிறது.

விவாதிக்க தயாரா?

ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் கொடுத்த சவார்க்கர் போன்றவர்களை எப்படி தியாகியாக ஏற்கமுடியும். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்வதுபோல் அவர் வீர சவார்க்கர் இல்லை. கோழை சவார்க்கர்.

நானும் அந்தமானில் உள்ள சிறைச்சாலையை பார்த்துள்ளேன். புதுவையில் அமையும் தியாக சுவரில் சவார்க்கர் பெயரை பதிக்க காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சவார்க்கர் தியாகியா? என்பது பற்றி ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க தயாரா? தமிழில் புலமை பெற்ற அவர் என்னுடன் பேச வரட்டும்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.


Next Story