சேதராப்பட்டில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்


சேதராப்பட்டில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
x

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டு சேதராப்பட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது.

காலாப்பட்டு

உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டு சேதராப்பட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு உண்டானதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிற்சங்கத்தினர் போராட்டம்

புதுவை மாநிலம் சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ளூர் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு வழங்கக்கோரியும், தொழிலாளர் துறையின் சட்டம், சலுகைகளை தொழிற்சாலைகள் கடைபிடிக்க வலியுறுத்தியும் சேதராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிலாளர்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் போராட்டம் நடைபெற்றது. காலை முதலே அனைத்து கடைகளும் தொழிற்சாலைகளும் மூடப்பட்டு இருந்தன. சேதராப்பட்டு முத்தமிழ் நகரில் ஒரு தொழிற்சாலைக்குள் காலை 6 மணிக்கு தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டதாக தகவல் பரவியது.

தள்ளுமுள்ளு

இதை அறிந்த நாம் தமிழர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அந்த தொழிற்சாலையை முற்றுகையிட்டு கண்டன கோஷமிட்டனர். அவர்களை அங்கிருந்து கலைந்துசெல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் அங்கேயே நின்றுகொண்டு கோஷமிட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு உருவானது. மர்மநபர் சிலர் தொழிற்சாலைக்குள் முட்டையை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து சேதராப்பட்டு நான்கு ரோடு சந்திப்பில் கம்யூனிஸ்டு (எம்.எல்) மாநில தலைவர் மோதிலால் தலைமையில் ஏ.ஐ.சி.சி.டி.யு. தலைவர் சிவகுமார், ஏ.ஐ.டி.யு.சி. தினேஷ், பாட்டாளி தொழிற்சங்கம் வேல்முருகன், நாம் தமிழர் கட்சி தொழிற்சங்க தலைவர் ரமேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க தலைவர் முருகையன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

192 பேர் கைது

இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 32 பெண்கள் உள்பட 192 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story