சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

மூ.புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் சுனாமி பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
பாகூர்
மூ.புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் சுனாமி பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
சுனாமி ஒத்திகை
புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ), ஐதராபாத் இன்காய்ஸ் ஆகியவை இணைந்து இந்திய பெருங்கடலுக்கு உள்பட்ட கடலோர மாநிலங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
அதன்படி, புதுச்சேரி யூனியன் பிரதேச எல்லைக்கு உள்பட்ட பாகூர் கொம்யூன் மூ.புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் சுனாமி எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. காலை 9.30 மணிக்கு அந்தமான் நிக்கோபார் தீவில் 8.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
இது குறித்து, லாஸ்பேட்டை அவசர கால பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. தொடர்ந்து, மூ.புதுக்குப்பம் கடலோரப் பகுதிகளில் கிருமாம்பாக்கம் போலீசார் ஒலிபெருக்கி மூலம் சுனாமி எச்சரிக்கை விடுத்தனர்.
கடலில் மூழ்குவதுபோல நடிப்பு
இதையடுத்து, அங்கிருந்த மக்கள் அனைவரும் வாகனங்கள் மூலம் அருகில் உள்ள சமுதாய நலக்கூட மையத்திற்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டன.
சுனாமி அலை 7 மீட்டர் உயரத்திற்கு 11.49 மணியளவில் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் கடலில் மூழ்குவது போல நடித்தவர்களையும், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பது, காயமடைந்தவர்களுக்கு கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளிப்பது, உயரமான கட்டிடத்தில் இருப்பவர்களை மீட்பது, இடிபாடுகளை அப்புறப்படுத்துவது போன்றவை அதிரடியாக மேற்கொள்ளப்பட்டன.
சுனாமி ஒத்திகையினால் புதுக்குப்பம் கிராமத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இதனால், அந்தப் பகுதி 4 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்புடன் காணப்பட்டது.
16 துறை அதிகாரிகள் பங்கேற்பு
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மேலாண்மை, வருவாய்த் துறை, காவல் துறை, தீயணைப்பு துறை, சுகாதார துறை, மின் துறை, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, கடலோர காவல்படை படை, போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட 16 துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மாலை வரை நடந்த இந்த ஒத்திகை துணை மாவட்ட மாதிஸ்ட்ரேட் யஷ்வந்த் மீனா தலைமையில் நடந்தது. இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ, வில்லியனூர் சப்- கலெக்டர் மகாதேவன், வருவாய் அதிகாரி புவனேஸ்வரி, பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், டாக்டர் நாராயணன், போலீஸ் சூப்பிரண்டுகள் வீரவல்லவன், பழனிசாமி மற்றும் தன்னார்வலர்கள், கிராம மக்கள் என 300 பேர் பங்கேற்றனர்.






