14 ஆண்டுகளாகியும் உருவாக்கப்படாத உப்பனாறு பாலம்


14 ஆண்டுகளாகியும் உருவாக்கப்படாத உப்பனாறு பாலம்
x

போக்குவரத்து நெரிசலுக்கு மாற்று ஏற்படுத்தும் வகையில் கட்டுமானப் பணி தொடங்கி 14 ஆண்டுகளாகியும் உப்பனாறு பாலம் உருவாக்கப்படாத அவலம் நீடித்து வருகிறது.

புதுச்சேரி

போக்குவரத்து நெரிசலுக்கு மாற்று ஏற்படுத்தும் வகையில் கட்டுமானப் பணி தொடங்கி 14 ஆண்டுகளாகியும் உப்பனாறு பாலம் உருவாக்கப்படாத அவலம் நீடித்து வருகிறது.

போக்குவரத்து பிரச்சினை

புதுச்சேரியில் பெரும் பிரச்சினையாக இருப்பது போக்குவரத்து நெரிசல். அதுவும் வார இறுதி நாட்களிலும், விடுமுறையின் போதும் வாகனங்கள் திக்கு முக்காடுவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் உப்பனாறு வாய்க்கால் மீது பாலம் அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்காக காமராஜர் சாலையில் இருந்து, மறைமலை அடிகள் சாலை வரை 732 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டுவதற்கு, ஹட்கோ (நகர்ப்புற கட்டுமான மேம்பாட்டுக்கழகம்) கடன் உதவியுடன் ரூ.37 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டது. இருபுறமும் 1.5 மீட்டர் அகல நடைபாதை அமைப்பதும் இந்த திட்டத்தின் அம்சம் ஆகும்.

திடீர் நெருக்கடிகள்

கடந்த 2008-ம் ஆண்டு ரூ.3.5 கோடி மதிப்பில் பைல் பவுண்டேசன் அமைக்கப்பட்டது. அதன்பின் மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு என்.ஆர்.காங்., ஆட்சியில் ஹட்கோ மூலம் ரூ.37 கோடி கடன், மாநில அரசின் பங்கு தொகையாக ரூ.7.15 கோடி மதிப்பில் மேம்பாலம் பணி தொடங்கப்பட்டது.

இப்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், அண்ணா சாலை, திருவள்ளுவர் சாலை, காமராஜர் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பதால் உப்பனாறு பாலம் கட்டுவதில் அப்போது அரசு சார்பில் ஆர்வம் காட்டப்பட்டது.

ஆனால் பாலம் கட்டுமானப் பணியால், மழை காலத்தில் வாய்க்காலை ஒட்டியுள்ள குடியிருப்புகளுக்குள் மழை தண்ணீர் புகும் என எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பாலம் கட்டுமான பணி நிறுத்தப்பட்டு கோடை காலத்தில் மட்டும் பணியை செயல்படுத்த உத்தரவிடப்பட்டது. இப்படி அடிக்கடி ஏற்பட்ட திடீர் நெருக்கடிகளால் குறிப்பிட்ட காலத்திற்குள் உப்பனாறு பாலம் கட்டுவதில் தொய்வு ஏற்பட்டது.

கட்டுமான நிறுவனம் வழக்கு

தற்போது 75 சதவீத கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் காமராஜர் சாலை, மறைமலையடிகள் சாலையை இணைக்கும் பணி மட்டுமே பாக்கி உள்ளது.

பாலம் கட்டுவதற்கான மாநில அரசின் ரூ.7.15 கோடி பங்கு தொகையில் 1.15 கோடி மட்டுமே வழங்கப்பட்டது. மாநில அரசின் மீதி தொகை ரூ.6 கோடி வழங்கப்படவில்லை.

இதனால் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தனியார் நிறுவனம் கட்டுமானப் பணிகளை நிறுத்தியது. கட்டுமானப் பணிக்கு தர வேண்டிய தொகையை வட்டியுடன் கொடுக்க வேண்டும். தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கட்டுமான தொகையை உயர்த்த வேண்டும் என கட்டுமான நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்தநிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றதும் உப்பனாறு கட்டுமான பணிகளை விரைவுபடுத்த முனைந்தது. ஆனால் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட அதிகம் கொடுத்தால் மட்டுமே மேம்பாலம் பணி தொடங்க முடியும் என்று கட்டுமான நிறுவனம் தெரிவித்தது. இதனால் மீண்டும் உப்பனாறு பாலம் அமைப்பது முடங்கிப் போனது.

பொதுப்பணி அதிகாரிகள் கருத்து

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது:- உப்பனாறு மேம்பாலம் பணி 80 சதவீதம் முடிந்துவிட்டது. மேம்பாலம் பணிக்கு இதுவரை 37 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 20 கோடி ரூபாய் இருந்தால் மேம்பாலம் பணிகள் அனைத்தையும் முடித்து விடலாம். இதுதொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அரசு நிதி ஒதுக்கினால் விரைவில் மேம்பாலம் பணிகள் முடிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

உப்பனாறு பாலம் கட்டுமானப் பணிகள் தொடங்கி 14 ஆண்டுகள் ஆகியும் இன்னும் விடிவுகாலம் பிறக்கவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் வேதனையாக உள்ளது.Next Story