ரூ.1,000 கோடி முதலீட்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு


ரூ.1,000 கோடி முதலீட்டில்   2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
x

புதுவையில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி

புதுவையில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

தொழில்முனைவோர் மாநாடு

புதுவையில் தொழில்முனைவோர் மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் பிரான்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். நேற்று அவர்களுடன் அமைச்சர் நமச்சிவாயம் கலந்துரையாடினார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி புதுச்சேரி வந்தபோது 'பெஸ்ட் புதுச்சேரி' என்று அறிவித்தார். உள்துறை மந்திரி அமித்ஷா வந்தபோது அதை உறுதிப் படுத்தினார். புதுவையில் தொழில் வளர்ச்சியை கொண்டுவர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். தொழில்முனைவோர் மாநாடும் நடத்தப்பட்டது. இதில் 85 நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொழில் தொடங்க ஆர்வம்

புதுவையில் தொழில் புரிவதற்கு உள்ள சூழ்நிலை, இடர்பாடுகளை களைவது தொடர்பாக அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். தொழில் தொடங்க அவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

தொழில் தொடங்குவதற்கான அனுமதி, தண்ணீர், நிலம் போன்றவை தொடர்பாக கேட்டனர். அவற்றை உடனடியாக வழங்குவதாக தெரிவித்துள்ளோம். அவர் களால் படித்த இளைஞர் களுக்கு வேலைவாய்ப்பு தர முடியும். அதன் முதல் முயற்சியாக இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

2 லட்சம் பேருக்கு வேலை

புதுவையில் புதிய தொழில் தொடங்குவதற்கு உரிய சூழ்நிலைகளை உருவாக்கி தருவோம். மருந்து பொருட்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், எலக்ட்ரிக்கல், டெலிகாம் கம்பெனிகள் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளன. சேதராப்பட்டில் அரசுக்கு சொந்தமான 750 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு தொழில் தொடங்க இடம் வழங்க மத்திய அரசுக்கு கோப்பு அனுப்பி உள்ளோம்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மோட்டார் வாகன தொழிற்சாலைகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ரூ.1,000 கோடி முதலீடு செய்ய தொழில் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. இவற்றின் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடங்க ஒற்றை சாளர முறையில் அனுமதியும் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

பேட்டியின்போது தொழில்துறை செயலாளர் அருண் உடனிருந்தார்.


Next Story