ஜிப்மரை மேம்படுத்த வேண்டும்


ஜிப்மரை மேம்படுத்த வேண்டும்
x

ஜிப்மரில் மருந்து, மாத்திரை இன்றி நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அதனை சரிசெய்ய கவர்னர், முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

புதுச்சேரி

ஜிப்மரில் மருந்து, மாத்திரை இன்றி நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அதனை சரிசெய்ய கவர்னர், முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தவறான தகவல்

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி தற்போது அரசு பணிகளில் காலியாக உள்ள எல்.டி.சி., யு.டி.சி, உதவியாளர் போன்ற பதவிகளை நிரப்பும் பணிகளை செய்து வருகிறார். ஆனால் தி.மு.க.வினர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பணி நியமனத்தை தடுக்கும் முயற்சியில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அதற்கு அ.தி.மு.க. தனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறது.

தமிழகத்தில் தி.மு.க.வின் கொள்கைபரப்புச் செயலாளர் ஆர்.ராசா எம்.பி.யின் அத்துமீறிய பேச்சை மையப்படுத்தி புதுச்சேரியில் மத கலவரத்தை தூண்டும் விதத்தில் தி.மு.க. - காங்கிரசார் செயல்பட்டு வருகின்றனர்.

செம்மைப்படுத்த நடவடிக்கை

ஜிப்மர் மருத்துவமனை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய அளவில் தலைசிறந்த மருத்துவமனையாக செயல்பட்டது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இங்கு தரமான இலவச சிகிச்சை பெற்று வந்தனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாக ஜிப்மர் மருத்துவமனையில் போதிய மருந்து, மாத்திரைகள், ஊசி மருந்துகள் இல்லாததால் இங்கு வரும் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். புற்றுநோய், நரம்பியல், இதயநோய் போன்ற உயிர் சம்பந்தமான நோய்களுக்கு கூட உரிய மாத்திரை மருந்துகள் இல்லாமல் மக்கள் வேதனைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் உண்மை நிலையை உணர்ந்து கவர்னரும், முதல்-அமைச்சரும் உடனடியாக டெல்லி சென்று மத்திய மந்திரிகளை சந்தித்து ஜிப்மர் நிர்வாகத்தை செம்மைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story