

சென்னை,
பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்டுடியோ 11 என்ற நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுப்படி, பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் சிகரெட் விற்பனை செய்தால் அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அடிக்கடி சோதனைகள் நடத்தும்படியும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பப்கள், ஹூக்கா பார்லர்களில் சிறுவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளதை சுட்டிக் காட்டிய நீதிபதி, தமிழகத்தில் எத்தனை பப்கள் இயங்குகின்றன?, எத்தனை ஹூக்கா பார்லர்கள் இயங்குகின்றன?, சிறுவர்கள் மதுபானம் அருந்துவதை தடுக்க பப்களில் திடீர் சோதனைகள் நடத்தப்படுகின்றனவா?, அப்படியானால் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? ஹூக்கா பார்லர்களில் சிறுவர்கள் புகைபிடிக்க அனுமதிக்கப்படுகிறதா? என்பது குறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
மேலும், கான்பூர் ஐ.ஐ.டி. யில் போதைப்பொருள் புழக்கம் அதிகம் இருப்பதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டிய நீதிபதி, தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் போதைப் பொருட்கள் புழக்கம் இருக்கிறதா? என்பதை அந்தந்த கல்வி நிறுவன நிர்வாகங்கள், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து விசாரணை நடத்தும்படி சுற்றறிக்கை அனுப்ப தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.