470 ஏக்கர் பரப்பில் புதிய கார் உற்பத்தி ஆலை: மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்


தினத்தந்தி 28 Sep 2024 6:08 AM GMT (Updated: 28 Sep 2024 7:35 AM GMT)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலைக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

சென்னை,

புதிய தொழிற்சாலைகள் மூலம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் குழுமம், தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

ரூ. 9,000 கோடியில் கார் தயாரிப்பு ஆலையை நிறுவ கடந்த மார்ச் மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தொழிற்சாலைகள் நிறைந்துள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் தான் இந்த நிறுவனத்தின் ஆலை அமையவுள்ளது. பனப்பாக்கத்தில் உள்ள புதிய சிப்காட் வளாகத்தில், தோல் தொழில் அல்லாத முதல் தொழிற்சாலை இதுவாகும்.

470 ஏக்கர் பரப்பில் அமையும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார். கார் உற்பத்தி ஆலை மூலம் 5,000 பேர் நேரடியாகவும், 15,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறவுள்ள நிலையில், உள்ளூர் பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. சிப்காட் வளாகத்தில் 470 ஏக்கர் பரப்பளவில் ஆலையை அமைக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர்களின் மின்சாரக் கார்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. ராணிப்பேட்டை ஆலை மின்சாரக் கார் உற்பத்தியில் முக்கிய மையமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story