போலீஸ்- போக்குவரத்து ஊழியர் விவகாரம்: உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை


போலீஸ்- போக்குவரத்து ஊழியர் விவகாரம்: உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 25 May 2024 12:26 PM IST (Updated: 25 May 2024 1:01 PM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணிந்தீரரெட்டி உடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சென்னை,

நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் நாங்குநேரி என்ற இடத்தில் ஏறிய ஆறுமுகப்பாண்டி என்ற காவலரிடம் பயணச்சீட்டு எடுக்கும்படி நடத்துனர் கேட்டபோது, பயணச்சீட்டு எடுக்க காவலர் மறுத்துள்ளார். காவலர் பணியில் இருப்பவர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அவர் விளக்கமளித்துள்ளார். இந்த வாக்குவாதத்தை பயணி ஒருவர் காணொலியாக பதிவு செய்து வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து இதுகுறித்து விளக்கமளித்த அரசுப் போக்குவரத்துக் கழகம், "அரசுப் பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணிக்க முடியாது. அதற்கான அனுமதி வாரண்ட் இருந்தால் மட்டும்தான் பயணிக்க முடியும்" என்று கூறியது. அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தலைநகர் சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்துகளுக்கு எதிராக போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.

ஒருவழிப் பாதையில் பயணித்தல், சீருடை அணிவதில் குறைபாடு, நிறுத்தத்தைத் தாண்டி நிறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் காட்டி அரசுப் பேருந்துகளுக்கு தண்டங்களை விதித்து வருகின்றனர். அரசுப் பேருந்துகளுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் இதுவரை மேற்கொள்ளப்படாத நிலையில், காவலர்களின் இலவச பயணம் குறித்த போக்குவரத்துக் கழக அறிவிப்புக்குப் பிறகு, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் சர்ச்சை அதிகரித்தது.

இந்த நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் உள்துறை செயலாளர் அமுதா, போக்குவரத்து செயலாளர் பணிந்தீரரெட்டி உடன் திடீர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் காவல்துறை இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.


Next Story