

சென்னை,
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் இன்று (24.05.2026) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி, இ.ஆ.ப., தலைமையில், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வர்கள் முன்னிலையில் பல்வேறு வகையான வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நீர்வளத்துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த்துறை மற்றும் விவசாய பெருமக்கள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
“தேர்தலுக்கு முன்னரே அளிக்கப்பட்ட வாக்குறுதியான காவிரி, பொன்னியாறு மற்றும் திருமணிமுத்தாறு ஆகிய நதிகளை இணைப்பது குறித்தும், இத்திட்டத்திற்கான வழித்தடங்கள் குறித்தும் மாவட்ட கலெக்டர் தலைமையில், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை இந்த ஆறுகளுடன் இணைப்பதன் மூலம் இப்பகுதியில் உள்ள ஏரிகளில் தண்ணீர் நிரப்ப முடியும்.
மேலும் அனைத்து ஏரிகளுக்கும் குறைவான தண்ணீர் செல்லும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். காவிரி ஆற்றில் இருந்து புதிய திட்டத்தின் மூலமாக தண்ணீரை மங்கலம் ஏரிக்கு கொண்டு வருவதால், இத்திட்டம் அனைத்து ஏரிகளுக்கு முழுமையாக பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்மொழிவு தயாரித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சருடன் ஆலோசித்து, இதனைத் அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்.
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் தங்களது குறைகளை எளிதில் தெரிவிக்க ஏதுவாக பிரத்யேகமான “NAMMA THIRUCHENGODU, NAMMA MLA” என்ற செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம். பொதுமக்கள் இச்செயலியினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தரமான மருத்துவ சேவை அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் தவறுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். மகப்பேறு சிகிச்சை 24 மணி நேரமும் இயங்கும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.