சட்டமன்ற தேர்தல்: நீலகிரியில் 2 தொகுதிகளுக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி சார்பில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 100 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகளுக்கு நிகராக நாம் தமிழர் கட்சியும், தமிழக வெற்றிக் கழகமும் களமிறங்க தயாராக உள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள 100 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி, நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் ரகுபதி பீமன் (வயது 46), கூடலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் கார்த்திக் (31) போட்டியிடுகின்றனர். பேராசிரியரான ரகுபதி பீமன் பி.எச்டி. முடித்துள்ளார். அவரது தந்தை பீமன் ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது விவசாயம் செய்கிறார். ரகுபதி பீமன், கையூட்டு ஒழிப்பு பாசறை மாநில பொறுப்பாளராக உள்ளார்.
கூடலூர் தொகுதியில் போட்டியிடும் கார்த்திக் கல்லூரி படிப்பை முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது பெற்றோர் ராமகிருஷ்ணன்-விஜயலட்சுமி. தாயகம் திரும்பியவர்களான இவர்கள் அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். கார்த்திக் தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில இணைச்செயலாளராக உள்ளார்.






