கவர்னர் ஆர்.என்.ரவி 'திடீர்' டெல்லி பயணம்

சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று காலையில் விமானம் மூலம் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். தனிப்பட்ட காரணங்களுக்காக டெல்லி சென்று உள்ள அவர் வி.ஐ.பி.க் களை சந்திக்கும் நிகழ்ச்சிகள் ஏதும் இல்லை என்று கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று முழுவதும் டெல்லியில் இருக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி நாளை மதியம் சென்னை திரும்புவார் தெரிகிறது. தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக் கழகம் அமைப்பது தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவுக்கு முதலில் ஒப்புதல் அளிக்காத கவர்னர் கடந்த ஆண்டு மசோதாவை திருப்பி அனுப்பி இருந்தார்.
இதையடுத்து கடந்த அக்டோபர் 16-ந்தேதி சட்டசபையில் சித்த மருத்துவ பல்கலைக் கழக மசோதா மீண்டும் நிறை வேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலையில், சித்த மருத்துவப் பல்கலைக் கழக மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்காக கவர்னர் அனுப்பி வைத்துள்ள நிகழ்வை பார்க்கும் போது ஒப்புதல் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.






