த.வெ.க.வுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு என தகவல்

த.வெ.க. தரப்பில் ஐ.யூ.எம்.எல். கட்சியிடம் இன்று மீண்டும் ஆதரவு கோரப்பட்டது.
த.வெ.க.வுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு என தகவல்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டி, த.வெ.க.வை ஆட்சியமைக்க தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை.

இதையடுத்து, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சியில் த.வெ.க. ஈடுபட்டது. தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள வி.சி.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்.) ஆகிய கட்சிகளுக்கு த.வெ.க. அழைப்பு விடுத்தது.

இது தொடர்பாக அந்தந்த கட்சிகள் சார்பில் தங்களது நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. தற்போது வரை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. வி.சி.க. சார்பில் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தி முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, த.வெ.க.விடம் இருந்து தங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்து நீடிப்போம் எனவும் ஐ.யூ.எம்.எல். தெரிவித்திருந்தது. இருப்பினும், த.வெ.க. தரப்பில் ஐ.யூ.எம்.எல். கட்சியிடம் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஆதரவு கோரப்பட்டது. இந்த நிலையில், த.வெ.க.வுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தற்போது ஆதரவு அளித்துள்ளது. மின்னஞ்சல் மூலமாக த.வெ.க.விற்கு ஆதரவு கடிதம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com