கொடைக்கானல் மலர் கண்காட்சி - உற்சாகத்துடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல் மலர் கண்காட்சி - உற்சாகத்துடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
Published on

திண்டுக்கல்,

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை கொண்டாட லட்சக்கணக்கானோர் வருவது வழக்கம். அதன்படி தற்போது கோடை விடுமுறை காரணமாக குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.

கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே மாதத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில், தற்போது கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதனை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.

மலர் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்கி சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றன. மலர் கண்காட்சியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மலர் நாற்றுக்கள் மூன்று கட்டங்களாக நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டன.

தற்போது சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், பேன்சி, பேட்டுனியா, கேலண்டுலா, பிளாக்ஸ், செல்லோசியா, டேலியா மற்றும் பல்வேறு ரோஜா வகைகள் பூத்து பூங்கா களைகட்டியுள்ளது. வண்ண மலர்களை உற்சாகத்துடன் கண்டு ரசிக்கும் சுற்றுலாப்பயணிகள் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com