அதிமுகவில் இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்: ஐடிவிங் செயலர் ராஜ்சத்யன் பதிவால் பரபரப்பு

தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடைய விடாதீர்கள் என்று ராஜ்சத்யன் கூறியுள்ளார்.
ராஜ் சத்யன்
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் கலகக்குரல்கள் அதிகரித்துள்ளன. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதேபோல, தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் பலரும் தவெகவில் இணைவது நீடித்து வருகிறது. இந்த நிலையில், அதிமுகவில் இளைஞரக்ளுக்கு வழிவிடுங்கள் என்று அக்கட்சியின் ஐடிவிங் மாநில செயலாளர் ராஜ்சத்யன் பதிவிட்டுள்ளார். ராஜ்சத்யன் தனது பதிவில் கூறியிருப்பதாவது:

பூக்கடை மகேந்திரன்

அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராகக் நடந்த செயல்களால் கடந்த சில தினங்களாகவே மிகுந்த மனவேதனை அடைந்த தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளரும், முகநூல் பக்கங்களில் கடுமையாக கழக பணி ஆற்றக்கூடிய கே.எஸ். பூக்கடை மகேந்திரன் , "கழகம் மீண்டும் வலிமையோடு எழுந்து வர வேண்டும்" என்ற கனவோடு தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

அதிமுகவிற்கு இழப்பு

தேர்தல் தோல்விகளில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் கழகத்திற்கு எதிரான சிலரின் நடவடிக்கைகளால் இன்று ஒரு தூய தொண்டரை நாம் இழந்திருக்கிறோம். இது அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.தமிழகம் முழுவதும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கழகமே கோயில், அம்மாவே தெய்வம் என்று வாழ்ந்து வரும் லட்சோப லட்சம் தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் உயிர்நாடி.

எடப்பாடிக்கு எதிர்ப்பா?

இத்தகைய தொண்டர்களின் மனநிலையை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்திருந்தால், மகேந்திரன் போன்ற ஒரு துடிப்புள்ள தொண்டரை நாம் இழந்திருக்க மாட்டோம். தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடைய விடாதீர்கள். வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள். மறைந்த தம்பி கே.எஸ். பூக்கடை மகேந்திரன் அவர்களுக்கு எங்களது கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம்”என்று பதிவிட்டுள்ளார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சிவிசண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகிய மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணக்கமாக செல்ல மறுத்து வருகிறார்கள். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கக் கூடிய சூழலில் ராஜ்சத்யனின் இந்த பதிவால், அவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்க உள்ளாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com