சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு; 24 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

சென்னையில் வசித்து வந்த முத்துக்குமார், கிறிஸ்தவ மதத்திற்கு மாறி தனது பெயரை சாம் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
சென்னை,
கேரள மாநிலம் வாஞ்சியூர் காவல் நிலையத்தில் கடந்த 2001-ம் ஆண்டு மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியை டியூசன் ஆசிரியர் முத்துக்குமார் என்பவர் தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் தொடர்பாக போலீசார் முத்துக்குமார் மீது வழக்குப்பதிவி செய்து அவரை கைது செய்தனர். ஆனால் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான முத்துக்குமார், அதன் பிறகு தலைமறைவானார். நீண்ட கால தேடுதலுக்கு பிறகும் முத்துக்குமாரை கண்டுபிடிக்க முடியாமல் போனதால், இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நிலுவையில் இருக்கும் பழைய வழக்குகள் குறித்து சமீபத்தில் ஆய்வு செய்தபோது, முத்துக்குமார் தலைமறைவான விவகாரம் போலீசாரின் பார்வையில் சிக்கியுள்ளது. இது குறித்து விசாரித்தபோது, முத்துக்குமார் தற்போது வரை அவரது குடும்பத்தினருக்கு வங்கி கணக்கில் பணம் அனுப்பி வருகிறார் என்ற விவரம் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகள், மொபைல் எண்கள் ஆகியவற்றை ரகசியமாக கண்காணித்தனர். இதன்படி, முத்துக்குமார் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வசித்து வருகிறார் என்பதும், அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி தனது பெயரை சாம் என்று மாற்றிக் கொண்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.
அதுமட்டுமின்றி, அவர் அயனாவரத்தில் பாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு சென்னையில் 2 முறை திருமணம் நடைபெற்றுள்ளது. கேரளாவில் உள்ள அவரது உறவினர்களுடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்ட போலீசார், முறையான ஆதாரங்களுடன் சென்று முத்துக்குமாரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி, 24 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






