கோவை சிறுமி கொலை சம்பவம்: ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை - எஸ்.பி.வேலுமணி

கோவையில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சிறுமி கொலை சம்பவம்: ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை - எஸ்.பி.வேலுமணி
Published on

கோவை,

கோவை அருகே சூலூரை அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி நேற்று முன்தினம் மாலையில் கடைக்கு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியை பெற்றோர் மற்றும் உறவினர் அக்கம்பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சிறுமியை கடத்திச்சென்றதாக கூறப்பட்டது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சூலூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதற்கிடையே சூலூர் அருகே கண்ணம்பாளையம் குளத்தின் கரையோரம் முட்புதரில் ஒரு சிறுமியின் உடல் கிடப்பதாக சூலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த சிறுமியின் உடலை மீட்டனர்.

தகவல் அறிந்த மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யாபாரதி, கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமி தான் காணாமல் போனவர் என்பதும், அவரை 2 பேர் கடத்திச்சென்று கொலை செய்து உடலை முட்புதரில் வீசிச் சென்றதும் தெரியவந்தது. போலீசார் அந்த சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளநிலையில், சிறுமி படுகொலை செய்யப்பட்டதற்கு, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நிகழ்ந்ததுள்ளதாகவும், ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை என்பதற்கேற்ப தற்போதைய இந்த நிகழ்வு சான்றாக உள்ளதாகவும் எஸ்.பி.வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளா என்று கேள்வி எழுப்பி உள்ள அவர், சிறுமியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com