மதுபோதையில் ஆம்னி பஸ் ஓட்டிய டிரைவர்கள்: போலீசாரிடம் இருந்து தப்பி ஓட்டம்

திருச்செந்தூர், உடன்குடி, நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல வந்த ஆம்னி பஸ் டிரைவர்களிடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
பஸ் டிரைவர்களிடம் போலீசார் சோதனை நடத்திய காட்சி.
பஸ் டிரைவர்களிடம் போலீசார் சோதனை நடத்திய காட்சி.
Published on

தூத்துக்குடி, -

தூத்துக்குடி புதிய பஸ் நிலைய பகுதியில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், போக்குவரத்து போலீசார் புதிய பஸ் நிலைய பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மது போதையில் யாரேனும் வாகனங்களை ஓட்டி வருகின்றனரா என தீவிரமாக சோதனை நடத்தினர்.

அப்போது, திருச்செந்தூர், உடன்குடி, நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல வந்த ஆம்னி பஸ் டிரைவர்களிடம் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், சில டிரைவர்கள் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் பஸ்களை இயக்க போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், மது போதையில் இருந்த சில டிரைவர்கள் ஆம்னி பஸ்களை நிறுத்திய இடத்திலிருந்து தப்பி ஓடினர். இதன் காரணமாக பஸ்கள் இயக்கப்படாமல் நின்றதால், அதில் இருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

தொடர்ந்து, நடுரோட்டில் நின்றிருந்த ஒரு ஆம்னி பஸ்ஸை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தானே ஓட்டி சென்று பஸ் நிலையத்தில் பாதுகாப்பாக நிறுத்தினார். பின்னர், மற்றொரு டிரைவர் மூலம் சென்னைக்கு பஸ்ஸை இயக்க போலீசார் அனுமதி வழங்கினர்.இதற்கிடையில், மது போதையில் வாகனம் இயக்க முயன்ற டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com