மக்கள் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்: கவர்னர் ஆர்.என்.ரவி வேண்டுகோள்
பெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது
சென்னை,
வங்கக்கடலில் நிலவி வந்த பெஞ்சல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயலின் முன் பகுதி கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 3 அல்லது 4 மணி நேரங்களில் புயல் முழுமையாக கரையை கடந்துவிடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
பெஞ்சல் புயலுடன் பெய்து வரும் கன மழையால் தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நமது மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த இக்கட்டான நேரத்தில், நமது மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும், முற்றிலும் அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன். அதிகாரிகள் வழங்கும் அறிவுரைகளை தயவு செய்து பின்பற்றவும். இந்த அவசரநிலையைச் சமாளிக்க மத்திய, மாநில அமைப்புகள் அயராது உழைத்து வருகின்றன. சில தன்னார்வ தொண்டு அமைப்புகளும் மக்களின் துயரங்களைக் குறைக்க தங்களால் இயன்றதைச் செய்து வருகின்றன. இந்த இயற்கை பேரிடரை எதிர்கொள்வதில் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும் இருப்போம். என தெரிவித்துள்ளார்.