மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை: இருவருக்கு ஆயுள் தண்டனை

மாற்றுத்திறனாளி பெண்ணை அங்குள்ள புதருக்குள் தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா பகுதியை சேர்ந்த 33 வயது மாற்றுத்திறனாளி பெண் கடந்த 6.7.2022 அன்று ஊனையூர் மூவராயன் குளப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மருங்காபுரி கண்ணுக்குழி நடுவிப்பட்டி பகுதியை சேர்ந்த வெல்டர் பிரகாஷ் (வயது 25), அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ரமேஷ் (25) ஆகியோர் அங்கு வந்தனர்.
அவர்கள் 2 பேரும் சேர்ந்து அந்த பெண்ணை அங்குள்ள புதருக்குள் தூக்கிச்சென்று பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த போலீசார், திருச்சி முதலாவது கூடுதல் செசன்சு மற்றும் வன்கொடுமைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட பிரகாசுக்கும், ரமேசுக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பி.சுவாமிநாதன் தீர்ப்பு கூறினார்.






